×

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடத்திற்கு பணம் செலுத்திய பொதுமக்களுக்கு கிரைய பத்திரம் வழங்க வேண்டும்: குடியிருப்புவாசிகள் கோரிக்கை

வேளச்சேரி: அடையாறு மண்டலத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடத்திற்கு பணம் கட்டி முடித்தவர்களுக்கு கிரைய பத்திரம் வழங்க வேண்டும் என, குடியிருப்போர் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 178வது வார்டுக்கு உட்பட்ட தரமணி, தந்தை பெரியார் நகர், பாரதி நகர் ஆகிய பகுதியில் 7,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அரசுக்கு சொந்தமான இந்த இடம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தில் முதல் கட்டமாக 2500 பேர், அவரவர்களுக்கு தேவையான அளவில் மனைகளை பிரித்து வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த 1985ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், இந்நிலத்தை கையகப்படுத்தியது. பின்னர், ஒரு சதுர அடிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்தனர். பொதுமக்கள் குடியிருக்கும் மனை அளவுகளுக்கான மொத்த பணத்தையும் 20 ஆண்டுகளில் கட்ட மாத தவணையை நிர்னயித்தனர். பின்னர், அந்த பகுதி வீடுகளுக்கு மின் இணைப்பு, தெருவிளக்குகள், தார் சாலை, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை ஆகிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன.

தற்போது அவர்கள் குடியேறி 38 ஆண்டுகள் முடிந்த நிலையில், 80 சதவீத மக்கள் வாரியத்திற்கு பணத்தை கட்டி முடித்து தடையில்லா சான்று பெற்று விட்டனர். ஆனால், இவர்களுக்கு கிரைய பத்திரம் வழங்காமல் தமிழ்நாடு நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் அலைகழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்தாண்டு, பணத்தைக் கட்டி முடித்தவர்கள் இதுகுறித்து அதிகாரி களுக்கு மனு கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து நிலத்தினை அளந்து விட்டு, ஓர் ஆண்டாக கிடப்பில் போட்டு விட்டனர். இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன், பணத்தை கட்டி முடித்தவர்களுக்கு கிரைய பத்திரம் வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இதுவரை இந்த பகுதி மக்களுக்கு கிரைய பத்திரம் வழங்கப்படவில்லை.

எனவே, அரசு உயர் அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து, பணம் கட்டி முடித்தவர்களுக்கு உடனடியாக கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதன்முதலில் குடியேறிய 2500 பேரில் சிலர் தனது வீட்டு குடும்ப செலவிற்கு பணம் தேவைப்பட்டதால், தங்களுக்கு இருந்த வீட்டு மனைகளை பிரித்து விற்பனை செய்ததில் கூடுதலாக 3500 குடும்பங்கள் வசித்து வருவதால், அவர்களுடைய ஆவணங்களையும் சரிபார்த்து அவர்களுக்கும் கிரையபத்திரம் வழங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இடத்திற்கு பணம் செலுத்திய பொதுமக்களுக்கு கிரைய பத்திரம் வழங்க வேண்டும்: குடியிருப்புவாசிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Urban Habitat Development Board ,Adyar Mandal ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்