×

உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு பேரணி.! ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: உலக வீடற்றோர் தினத்தை முன்னிட்டு, சாலையோரம் வசிப்பவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று தீவுத்திடல் போர் நினைவு சின்னம் அருகில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ், துணை ஆணையர் (கல்வி) சினேகா, தெற்கு வட்டார துணை ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர்   உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், ‘‘சென்னையில் சாலையோரம் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடற்றோர் ஆகியோரை மீட்டு மறுவாழ்வு அளிக்க, மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 13 ஆண்கள் காப்பகமும், 8 பெண்கள் காப்பகமும், 1 ஆண், பெண் காப்பகமும், 5 சிறுவர்கள் காப்பகமும், 3 சிறுமிகள் காப்பகமும், 3 மனநலம் பாதிக்கப்பட்ட ஆண்கள் காப்பகமும், 2 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் காப்பகமும், 4 முதியோர் காப்பகமும், 1 அறிவுதிறன் குறைபாடுடைய சிறுவர்கள் காப்பகமும், 1 மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகமும், 1 திருநங்கைகள் காப்பகமும், மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுடன் உடனிருப்பவர்கள் தங்கும் 6 ஆண்கள் சிறப்பு காப்பகங்கள் மற்றும் 7 பெண்கள் சிறப்பு காப்பகங்களும் என 55 காப்பகங்கள் இயங்கி வருகிறது.  இவற்றில் தற்போது 1,667 பேர் தங்கவைக்கப்பட்டு முறையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்கள் அருகிலோ அல்லது வேறு ஏதேனும் பகுதிகளிலோ சாலையோரங்களில் வசிக்கும் தனிநபர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வீடற்றோர் வசிப்பதை அறிந்தால் சென்னை மாநகராட்சியின் 1913, 94451 90472, 044-2530 3849 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன் காப்பகப் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையோரம் வசிப்பவர்களை மீட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி, காப்பகத்தில் தங்கவைத்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post உலக வீடற்றோர் தின விழிப்புணர்வு பேரணி.! ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : World Homeless Day Awareness Rallying ,Governor ,Chennai ,World Homelessness Day ,Governor of the Corporation ,Dinakaran ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...