×

மதுராந்தகம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

  • நடுவழியில் பயணிகள் தவிப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், அப்பகுதியில் பரபரபபும், பதட்டமும் ஏற்பட்டது. இதன் காரணமாக, எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். சென்னை மற்றும் தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினமும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கூடுதலாக ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளும், தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு கரசங்கால் இடையே தண்டவாளம் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு கூட்ஸ் ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றது. அப்போது, தொழுப்பேடு அருகே பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரயிலின் சரக்கு பெட்டி திடீரென தடம் புரண்டது. இதன்காரணமாக இந்த மார்க்கத்தில் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட குருவாயூர் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், திருப்பதி பாசஞ்சர், சோழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், தண்டவாளத்தை விட்டு இறங்கிய ரயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். விழுப்புரத்தில் இருந்து கிரேன் கொண்டு வரப்பட்டு சுமார் 2 மணி நேரம் கழித்து தடம் புரண்ட சக்கரம் சரிசெய்யப்பட்டு சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதன்பிறகு, ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றது.

இதன்காரணமாக பயணிகள் பெரும் சிரமப்பட்டனர். இது சம்மந்தமாக ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குருவாயூர் எக்ஸ்பிரஸ் மதுராந்தகம் அருகே சுமார் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறங்கி பேருந்துக்கு செல்ல பயணிகள் மூட்டை மூடிச்சுகளுடன் பேருந்து பிடித்து செல்ல சென்றனர். இதனால், அவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘எதிர்ப்பாராமல் ரயில் தடம் புரண்டதால் எங்களது பயணம் தாமதமானது. மேலும், பேருந்து பிடித்து செல்ல மூட்டை முடிச்சுகளுடன் குழந்தைகளை அழைத்துக்கொண்டு பேருந்து பிடிக்க செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் உறவினர் மற்றம் அலுவலக சம்மந்தமாக கலந்து கொள்ள சென்ற பயணம் ரயில் தடம் புரண்டதால் பங்கேற்ற முடியாமல் போனது’ என்றனர்.

The post மதுராந்தகம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Madhurantagam ,CHENNAI ,Madhurandakam ,Madurandakam ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் காலமானார்