×

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு: வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை குடிநீர் வாரியம் சார்பில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரிகள் மூலம் தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னைக்கு அருகிலுள்ள வேறு சில உள்ளாட்சி அமைப்புகளுக்கும், சில பெரிய ஆலைகளுக்கும் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஏரிகளில் இருந்து கிடைக்கும் குடிநீருடன், பற்றாக்குறையை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 885 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. இதில் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம் மூலம் ரூ. 505 கோடியும், இதர லாரி குடிநீர் வழியாக ரூ. 380 கோடியும் கிடைத்து வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2ம் அரையாண்டு என பொதுமக்களிடம் இருந்து வரி மற்றும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் மொத்தம் 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்தியுள்ளனர். இதில் வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் வரியாக ஆண்டு சொத்து மதிப்பில் 7 சதவீதமும், கட்டணமாக மாதம் ரூ. 80ம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றவர்கள் இதுவரை மாதம் ரூ. 80 செலுத்தி வந்தனர்.
இந்த கட்டணம் இப்போது ரூ. 84 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது மாதத்துக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விரிவாக்கப்பட்ட மண்டலங்கள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியாக இருந்தால் அங்கு குடிநீர் கழிவுநீர் கட்டணம் 5 சதவீதம், வணிக ரீதியான பயன்பாட்டுக்கு 10 சதவீத கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் லாரி தண்ணீர் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ. 475ல் இருந்து ரூ. 499 ஆகவும், 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ. 700ல் இருந்து ரூ. 735 ஆகவும், 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ரூ. 1260 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான குடிநீர் கட்டணம் 6 ஆயிரம் லிட்டர் ரூ. 700ல் இருந்து ரூ. 770 ஆகவும் 9 ஆயிரம் லிட்டர் ரூ. 1000த்தில் இருந்து ரூ. 1100 ஆகவும், 16 ஆயிரம் லிட்டர் ரூ. 1700ல் இருந்து ரூ. 1870 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியில் மீட்டர் உள்ள தண்ணீர் உபயோகத்துக்கு (10 கிலோ லிட்டர்) ரூ. 40 உயர்த்தப்பட்டு ரூ. 263 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 30 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 12,722 மில்லியன் கன அடி

சென்னைக்கு மேற்பரப்பு நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் ஆகியவை மூலம் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக புழல் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவையும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியும் சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகள் ஆகும். இவற்றின் மொத்த கொள்ளளவு 12,722 மில்லியன் கன அடி ஆகும். இத்துடன், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 12 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் பெறுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது.

  • வரி செலுத்த தவறினால் ஜப்தி

சென்னையில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களிடம் இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை குடிநீர் மற்றும் கழிவுநீர் சேவைக்கான வரி வசூலிக்கப்படுகிறது. ஒவ்வோர் அரையாண்டும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரி செலுத்த வேண்டும். 15ம் தேதிக்கு மேல் செலுத்தாவிட்டால், அந்த தொகைக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது. நீண்ட காலம் வரி செலுத்தாத சொத்து உரிமையாளரிடம் இருந்து, பொருட்களை ஜப்தி செய்யப்படும். அந்த வகையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி பாக்கி வைத்துள்ள வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

  • சுத்திகரிப்பு நிலையங்கள்

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கான பணியில், மூலவளத்திலிருந்து பெறப்படும் நீரானது பலவகைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. வீராணம் ஏரிக்கு அருகில் வடக்குத்து, செம்பரம்பாக்கம், புழல், சூரப்பட்டு, சென்னைக்குள் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் பெரிய குடிநீர் சுத்திகரிப்புநிலையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே பொது மக்களுக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. வாரியத்தின் தற்போதைய மொத்த குடிநீர் சுத்திகரிப்புத் திறன் நாளொன்றுக்கு 1,504 மில்லியன் லிட்டர் ஆகும்.

The post சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு: வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Water Board ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்