×

இப்ப வாங்கிக்கோங்க… அப்புறம் காசு தாங்க… அல்போன்சா மாம்பழம் இஎம்ஐயில் விற்பனை: விலையை பார்த்து ஜகா வாங்கும் மக்கள்

  • பழ வியாபாரிக்கு வந்தது புது ஐடியா

புனே: வீடு, வாகனம் மட்டுமல்ல ஏசி, பிரிட்ஜ், டிவி, மொபைல் போன் என எல்லாமே இஎம்ஐயில் கிடைக்கிறது. சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள், ரூ. 1,500க்கு மேல் உள்ள பில் தொகையை இஎம்ஐயில் மாற்றிக் கொள்ள அனுமதிக்கின்றன. காசு இருக்கிறதோ இல்லையோ, விரும்பிய பொருள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். வசதி இல்லாத மக்களையும் எல்லா பொருட்களையும் வாங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வந்ததுதான் தவணை திட்டம். ஒரு வகையில், மக்களின் வாங்கும் திறனை இது அதிகரிக்கிறது என்றே கூறலாம்.

இப்படி பல வகை பொருட்களுக்கு இஎம்ஐ உள்ளது போல, பழத்துக்கும் இஎம்ஐ அறிமுகம் செய்துள்ளார் ஒரு வியாபாரி. அல்போன்சா மாம்பழத்துக்குதான் இந்த தவணை திட்டத்தை அவர் கொண்டு வந்துள்ளார். கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசன் களை கட்டி விடும். ஆனால், அல்போன்சா மாம்பழம் சந்தைக்கு வரத்துவங்கியும், அதிக விலை காரணமாக பலர் வாங்க முன்வருவதில்லை. இதையடுத்து, பழங்களை இஎம்ஐக்கு விற்பனை செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளார், புனேயை சேர்ந்த பழ வியாபாரி கவுரவ் சனாஸ். இது குறித்து கவுரவ் சனாஸ் கூறியதாவது:

கொரோனா பரவலுக்கு பிறகு வருவாய் பாதிக்கப்பட்டதால், பெரும்பாலான மக்கள் அல்போன்சா பழங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. பழம் விலை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். எனவே, நாங்கள் மாம்பழங்களுக்கு இஎம்ஐ திட்டத்தை துவக்கியுள்ளோம். இதன்மூலம் மாம்பழ பிரியர்கள் ஈர்க்கப்பட்டு, விற்பனை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரிட்ஜ், ஏசி போன்ற வீட்டு உபயோக பொருட்களை இஎம்ஐக்கு தரும்போது, பழத்தை தரக்கூடாதா என்ன? என்ற சிந்தனையில் உதித்தது இந்த ஐடியா. இதன்மூலம், அனைவரும் எளிதாக மாம்பழம் வாங்க முடியும்.

மாம்பழம் வாங்கும்போது கிரெடிட் கார்டில் வாங்க வேண்டும். அதனை 3, 6 அல்லது 12 மாத தவணையில் செலுத்திக் கொள்ளலாம். ரூ. 5,000க்கு மேல் பழம் வாங்குவோருக்குதான் இந்த இஎம்ஐ வசதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மகாராஷ்டிராவில் தற்போது அல்போன்சா விலை சந்தேக்கேற்ப ஒரு டசன் ரூ. 800 முதல் ரூ. 1,300 வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன்படி குறைந்தது 6 டசனுக்கு மேல் மாம்பழம் வாங்கினால்தான் இஎம்ஐ திட்டத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

The post இப்ப வாங்கிக்கோங்க… அப்புறம் காசு தாங்க… அல்போன்சா மாம்பழம் இஎம்ஐயில் விற்பனை: விலையை பார்த்து ஜகா வாங்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Alfonsa ,Mango ,Jaga ,Pune ,Alfonsa Mango ,Zaga ,Dinakaran ,
× RELATED தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை