×

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மரக்காணம் –புதுவை மீனவர்கள் திடீர் மோதல்: மீனவ கிராமங்களில் பதற்றம்

மரக்காணம்: நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மரக்காணம் மீனவர்களை புதுவை மீனவர்கள் தாக்கியதால் மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த குப்பன் (48), சுந்தரமூர்த்தி (55), சக்திவேல் (40), சந்துரு (22) மற்றும் 15க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மீனவர்கள் மற்றொரு விசைப்படகில் அங்கு வந்தனர்.

அதிக அளவில் மீன்களை பிடித்ததை பார்த்த வீராம்பட்டினம் மீனவர்கள் ஆத்திரத்துடன் அவர்கள் விசைப்படகில் வைத்திருந்த இரும்பு பைப்புகள் மரத்தடிகளை எடுத்து எக்கியர்குப்பம் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் எக்கியர்குப்பத்தை சேர்ந்த மீனவர் சந்துரு படுகாயம் அடைந்தார். இது குறித்து மரக்காணம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை மாநில மீனவர்கள் தாக்குதலை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தால் மீனவ கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மரக்காணம் – புதுவை மீனவர்கள் திடீர் மோதல்: மீனவ கிராமங்களில் பதற்றம் appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Puduwai ,Villupuram district… ,Dinakaran ,
× RELATED மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி...