×

மதுராந்தகம் அருகே சிந்தாமணி கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி குடிசை வீடுகள் நாசம்: குழந்தைகளுடன் வெளியேறிய மக்கள் அவதி

மதுராந்தகம்: மாத்தூர் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் ஏரி நீரில் குடிசை வீடுகள் மூழ்கியுள்ளன. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள், மேடான பகுதியில், தங்களுக்கு வீடு கட்ட நிலம் ஒதுக்கி தர நடவடிக்கை வேண்டும் வலியுறுத்துகின்றனர். மேல்மருவத்தூர் அடுத்த மாத்தூர் ஊராட்சி சிந்தாமணி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பல குடும்பத்தினருக்கு சொந்தமாக வீட்டுமனை கிடையாது. இதனால், சிலர் சிந்தாமணி – ஊனமலை சாலையோரத்தில், ஏரியை ஒட்டியபடி குடிசைகள் அமைத்து பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். பருவமழையின்போது, பெய்த மழையால், ஏரியில் தண்ணீர் நிரம்பி, பொதுமக்களின் தேவைக்கும், விவசாயத்துக்கு போதுமானதாக அமைந்தது. மீதம் இருந்த தண்ணீர், கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த தொடர் கனமழையால், ஏரி முழுவதும் மீண்டும் தண்ணீர் நிரம்பி, அருகில் வீடுகள், குடிசைகள் உள்ள பகுதியில் வழிந்தோடியது. இதில், குடிசைகள் முழுவதுமாக மூழ்கி, அங்கிருந்த பொருட்கள் நாசமாயின. பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறி, பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.பல நாட்களாகியும் தண்ணீர் வடியாததால், அங்கு வசித்த மக்கள், வீடு இல்லாமல் தவிக்கின்றனர். இதையொட்டி, பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு, மேடான பகுதியில் வீட்டு மனை ஒதுக்கி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்களுக்கு கிராமத்தில் உள்ள கிராம நத்தம் பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, இங்கு தண்ணீர் நிரம்பி, குழந்தைகளுடன் ஆங்காங்கே மரத்தடியிலும், மண்டபங்களிலும் தங்கியுள்ளோம். அப்பகுதியில் உள்ள பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகளுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்கிறோம். எங்களுக்கு கிராம பகுதியில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post மதுராந்தகம் அருகே சிந்தாமணி கிராமத்தில் ஏரி நீரில் மூழ்கி குடிசை வீடுகள் நாசம்: குழந்தைகளுடன் வெளியேறிய மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Sindamani village ,Madurandakam Nasam ,Madurandakam ,Mathur Kuratshi Chintamani ,Sindamani ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...