×

கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்ரிங்கு சிங் ருத்ரதாண்டவத்தில் ஸ்தம்பித்தது குஜராத் டைட்டன்ஸ்: விஜய் ஷங்கர் விஸ்வரூபம்; ரஷித் ஹாட்ரிக் வீண்

அகமதாபாத்: திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட த்ரில்லர் திரைப்படத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி 5 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி ருத்ரதாண்டவமாடிய ரிங்கு சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உடல்நலக் குறைவால் களமிறங்காததால், அவருக்கு பதிலாக ரஷித் கான் தலைமை பொறுப்பேற்றார். ஹர்திக் இடத்தில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார்.

கேகேஆர் அணியில் சவுத்தீ, மன்தீப்புக்கு பதிலாக பெர்குசன், ஜெகதீசன் இடம் பெற்றனர். சாஹா, கில் இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். சாஹா 17 ரன் எடுத்து நரைன் சுழலில் ஜெகதீசன் வசம் பிடிபட்டார். கில் – சுதர்சன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தனர். கில் 39 ரன் விளாசி நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபினவ் மனோகர் ஹாட்ரிக் பவுண்டரியுடன் 14 ரன் எடுத்து சுயாஷ் சுழலில் கிளீன் போல்டானார். சிறப்பாக விளையாடி தொடர்ந்து 2வது அரை சதம் விளாசிய சாய் சுதர்சன் 53 ரன் எடுத்து (38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். குஜராத் டைட்டன்ஸ் 18 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால், அடுத்த 2 ஓவரில் விஜய் ஷங்கர் விஸ்வரூபம் எடுக்க குஜராத் ஸ்கோர் யாருமே எதிர்பாராத வகையில் 200 ரன்னை தாண்டியது. 19வது ஓவரில் மட்டும் 25 ரன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளையும் ஹாட்ரிக் சிக்சர்களாக பறக்கவிட்டு மிரட்டினார் விஜய்.

குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. விஜய் ஷங்கர் 63 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மில்லர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் நரைன் 3, சுயாஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 20 ஓவரில் 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கேகேஆர் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் குர்பாஸ் 15 ரன், ஜெகதீசன் 6 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, 4 ஓவரில் 28/2 என கொல்கத்தா தடுமாறியது. இந்த நிலையில், வெங்கடேஷ் அய்யர் – கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி 3வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 100 ரன் சேர்த்தது. ராணா 45 ரன் (29 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), வெங்கடேஷ் 83 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஜோசப் வேகத்தில் வெளியேறினர்.

17வது ஓவரின் முதல் 3 பந்தில் ஆந்த்ரே ரஸ்ஸல் (1), சுனில் நரைன் (0), ஷர்துல் தாகூர் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரஷித் கானுக்கு ‘ஹாட்ரிக்’ சாதனையை பரிசளித்தனர். 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்த கேகேஆர், 16.3 ஓவரில் 155 ரன்னுக்கு 7 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது. இதனால் வெற்றி உறுதி என்று குஜராத் வீரர்கள் குதூகலித்த நிலையில், ரிங்கு சிங் வடிவில் விதி விளையாடியது. லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்தையும் சிக்சர், பவுண்டரியாக பறக்கவிட்டார் ரிங்கு. ஆனாலும், யஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டது. உமேஷ் முதல் பந்தில் 1 ரன் எடுத்து ரிங்குவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு நடந்தது… யாருமே நம்ப முடியாத வகையில் நனவான ஒரு கனவு என்றே சொல்லலாம். யஷ் போடப் போட ரிங்கு சிங் மட்டையில் இருந்து சிக்சர்களாகப் பறந்தன. தொடர்ச்சியாக 5 பந்துகளையும் சிக்சருக்குத் தூக்கி ருத்ரதாண்டவமாடிய ரிங்கு, கொல்கத்தா அணிக்கு த்ரில் வெற்றியை வசப்படுத்த குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.

ரிங்குவின் அந்த அதிரடியில் சுதர்சன், விஜய் ஷங்கரின் அரை சதங்களும், ரஷித் கானின் ஹாட்ரிக் விக்கெட்டும் ஆவியாகின. கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தியது. ரிங்கு 48 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்), உமேஷ் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் பந்துவீச்சில் ரஷித் 3, ஜோசப் 2, லிட்டில், ஷமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கேகேஆர் 2வது வெற்றியுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது. ரிங்கு ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

The post கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்சர்ரிங்கு சிங் ருத்ரதாண்டவத்தில் ஸ்தம்பித்தது குஜராத் டைட்டன்ஸ்: விஜய் ஷங்கர் விஸ்வரூபம்; ரஷித் ஹாட்ரிக் வீண் appeared first on Dinakaran.

Tags : Singh Rudrathandavam ,Gujarat Titans ,Vijay Shankar Viswaroopam ,Rashid ,AHMEDABAD ,IPL T20 ,Kolkata Knight… ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...