×

மத்திய பிரதேசத்தில் தகாத தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் சகோதரன், சகோதரியை மரத்தில் கட்டிபோட்டு அடித்த மக்கள்

கண்ட்வா: தகாத தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் சகோதரன், சகோதரியை மரத்தில் கட்டிப்போட்டு பொதுமக்கள் அடித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டம் பிப்லோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாமண்டா கிராமத்தில் 21 வயதான பிஹாரிலால் என்பவர் தனது சகோதரி கலாவதியை சந்திக்க சென்றார். அந்த நேரம் கலாவதியின் கணவர் ரமேஷ், சில வேலைகளின் காரணமாக வெளியூர் சென்றிருந்தார். வீட்டிற்குள் சகோதரனும், சகோதரியும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள், அவர்கள் இருவரும் கள்ளத்ெதாடர்பு வைத்திருப்பதாக நினைத்து இருவரையும் வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்து தாக்கினர்.

பாதிக்கப்பட்ட இருவரும், தாங்கள் சகோதரர், சகோதரி என்று பலமுறை கோரியும் அவர்களின் பேச்சை கிராம மக்கள் ஏற்கவில்லை. கூட்டத்தில் இருந்த சிலர், இருவரையும் அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து கட்டையால் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர். தாங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று பலமுறை கெஞ்சிக் கேட்டும், அவர்கள் விடாது அடித்து துன்புறுத்தினர். இதற்கிடையே, அந்த பெண்ணின் கணவர் ரமேஷுக்கு அங்கிருந்த ஒருவர் போன் செய்து நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

அப்போது எதிர்முனையில் பேசிய ரமேஷ், ‘அவர் எனது மனைவியின் சகோதரர். எனது மச்சான். அவர்களை அடிக்க வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். இருப்பினும் கிராம மக்களின் சந்தேகம் தீரவில்லை. மேலும் அடித்துக் கொண்டே இருந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த இருவரையும் விடுவித்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு, மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மத்திய பிரதேசத்தில் தகாத தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் சகோதரன், சகோதரியை மரத்தில் கட்டிபோட்டு அடித்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Central Territories ,Kandwa ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...