×

108 வைணவத் தலங்களில் 3வது தலமான கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாணம் நூற்றுக்கணக்கானோர் தரிசனம்

கும்பகோணம்: 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த வைணவத்திருத்தலம் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார். இங்கு சொர்க்கவாசல் தனியாக இல்லை. பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக 3வது தலமாக ஸ்ரீசாரங்கபாணி கோயில் விளங்குகிறது.

இத்தகைய பெருமை பெற்ற சாரங்கபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கோமளவள்ளி தாயாருக்கான பங்குனி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் 16 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.அதுபோல இவ்வாண்டு இவ்வுற்சவம் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி செவ்வாய்கிழமை, தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, ஏற்றப்பட்டு, விழா தொடங்கி நாள்தோறும் தாயார் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சாரங்கபாணி சுவாமியுடன் கோமளவல்லி தாயார் சிறப்பு பட்டு மற்றும் விசேஷ மலர் அலங்காரத்தில் கோயில் பிரதான கொடிமரம் அருகே எழுந்தருள, முதலில் மாலை மாற்றும் வைபவமும் சீர்வரிசை சமர்பித்தலும், நலுங்கு வைத்தல் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு யாகம் வளர்த்து, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, மாங்கல்ய தாரணம் சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் 12ம் தேதி புதன்கிழமை பெருமாள் தாயார் ஏகசிம்மாசன சேவை, விடையாற்றியுடன் இவ்வாண்டிற்கான கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவம் நிறைவுபெறுகிறது.

The post 108 வைணவத் தலங்களில் 3வது தலமான கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் திருக்கல்யாணம் நூற்றுக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Thirukalyanam ,Kumbakonam Sarangapani temple ,Kumbakonam ,Kumbakonam Sarangapaniswamy temple ,Komalavalli Mother Panguni Brahmotsavam ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...