×

கவியருவியில் குளிக்க தொடர் தடை ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்: அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கோரிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கவியருவியில் தண்ணீர் வரத்தின்றி தொடர் தடையால், ஆழியாறு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், கவியருவி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள்.

இதில் ஆழியார் வருவோர், அருகே உள்ள கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மழை காலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அந்த நேரத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் குவியும்.கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பல மாதமாக பெய்ததால், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் வரை கவியருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரித்து மழையில்லாததால், பிப்ரவரி மாதத்தில் இருந்து தண்ணீர் வரத்து மிகவும் குறைய துவங்கியதுடன், மார்ச் மாதம் துவக்கத்தில் கவியருவியில் தண்ணீர் இன்றி பாறைகளாக காட்சி அளித்தது. வறட்சியால் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்டது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கவியருவிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தண்ணீரின்றி தொடர்ந்து தடையால், ஏமாற்றத்தில் திரும்புகின்றனர்.இந்நிலையில், தற்போது ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகளிகள் ஆற்றின் தடுப்பணை பகுதியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அபாயத்தை உணராமல் இறங்கி குளித்து மகிழ்கின்றனர். இந்த தடுப்பணை பகுதியில் குளிக்க தடை விதித்து, போலீஸ் சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனையும் மீறி சென்று சுற்றுலா பயணிகள் குளிக்கின்றனர்.தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாலும், அடிக்கடி உயிர் பலி வாங்கும் இந்த தடுப்பணையருகே போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லாதது தன்னார்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படுவதால், வரும் நாட்களில் ஆழியாறு தடுப்பணைகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகாரிக்க வாய்ப்புள்ளது. அந்நேரத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், பாதுகாப்பு கருதி குளிக்க அனுமதிப்பதை தவிர்க்க நடவடிக்கை வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கவியருவியில் குளிக்க தொடர் தடை ஆழியாறு தடுப்பணையில் தடையை மீறி குவியும் சுற்றுலா பயணிகள்: அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kaviaruvi ,Azhiyar Barrage ,Pollachi ,Dinakaran ,
× RELATED ஆழியாறு தடுப்பணையில் தடைமீறிய...