×

சமயபுரம் கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்: 18ம் தேதி தேரோட்டம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் மேற்கொள்ளும் பச்சை பட்டினி விரதம் கடந்த மாதம் 12ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் கடந்த 4 வாரமாக அம்மனுக்கு பூக்களை சாற்றினர். அம்மன் பச்சைப்பட்டினி விரதம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதைத் தொடர்ந்து இன்று காலை மேஷ லக்னத்தில் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 10ம் திருநாளான வரும் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடக்கிறது. 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

The post சமயபுரம் கோயிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றம்: 18ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Temple ,Sirra Festival Flagrana ,of ,Sitra Cheru festival ,Samayapuram Mariamman Temple ,Samayapuram Temple ,Shiritra festival ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...