×

கோடை வெப்பத்தை தணிக்கமேட்டுப்பாளையத்தில்நுங்கு விற்பனை களை கட்டியது

மேட்டுப்பாளையம், ஏப்.9: கோடை காலத்தையொட்டி வெப்பத்தை தணிக்க மேட்டுப்பாளையத்தில் நுங்கு விற்பனை களை கட்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்படும் இளநீர், மோர், கம்பங்கூழ், நுங்கு உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ஊட்டி சாலை, அன்னூர் சாலை, வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் நுங்கை பொதுமக்கள் விரும்பி சாப்பிட்டும், வீடுகளுக்கு வாங்கியும் செல்கின்றனர். நுங்கினை சாப்பிடுவதன் மூலமாக நாம் பல்வேறு உடல் உபாதைகளை சரி செய்து கொள்ளலாம். குறிப்பாக கோடை காலங்களில் உடலில் உள்ள நீரின் அளவு விரைவாக குறைந்து நாம் சோர்வடையாமல் இருக்க நுங்கில் உடலுக்குத்தேவையான நீர்ச்சத்து அதிகம் உள்ளது. உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக உள்ளது. நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது. கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம். நுங்கு சாப்பிடுவதன் மூலமாக சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். சின்னம்மை வராமல் தடுக்கவும், சின்னம்மையை குணப்படுத்தவும் நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் ஏற்படும். அவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து மயக்கம் ஏற்படுவது குறையும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் செரிமாணம் அதிகரிப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். நுங்கில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவும் என கருதப்படுகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் நுங்கின் விற்பனை களைகட்டியுள்ளது. இதுகுறித்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் நுங்கு கடை வைத்துள்ள செல்வகுமார் கூறுகையில், ‘கோடை காலங்களில் நுங்கு விற்பனை சற்று அதிகமாகவே இருக்கும். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புளியம்பட்டி, கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து நுங்கினை வெட்டி எடுத்து வந்து விற்பனை செய்து வருவதாகவும், தற்போது கோடை காலம் என்பதால் நுங்கு விற்பனை அமோகமாக இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.

The post கோடை வெப்பத்தை தணிக்க
மேட்டுப்பாளையத்தில்
நுங்கு விற்பனை களை கட்டியது
appeared first on Dinakaran.

Tags : Nungu ,Mettupalayam ,Tamil Nadu ,Tanikamedtupalayam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...