
சங்ககிரி, ஏப்.9: சங்ககிரி அருகே போலி மருத்துவர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர். சங்ககிரி விஎன்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (63). இவர் சங்ககிரி தெலுங்கர் தெரு பகுதியில் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி, நோயாளிகளுக்கு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக, சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி தலைமையில் போலீசார் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை டாக்டர்.ஆர்த்தி, வருவாய் ஆய்வாளர் கீதா, உள்ளிட்ட குழுவினர் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது நோயாளிகளுக்கு பன்னீர்செல்வம் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதையடுத்து பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்து, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், சங்ககிரி வைகுந்தம் காளிப்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த தேவராஜன் (67), என்பவர் வீட்டில் வைத்து ஆங்கில மருத்துகளை பயன்படுத்தி, நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து தெரியவந்தது. அதன் பேரில் சங்ககிரி அரசு மருத்துவர் செந்தில்வேலுடன் சென்று சோதனை செய்தபோது, போலி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு மருந்து, மாத்திரையை கைப்பற்றி தேவராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சங்ககிரியில் 2 போலி மருத்துவர்கள் கைது appeared first on Dinakaran.