×

அதிமுக 4 கோஷ்டிகளாக பிரிந்து மோதுவதால் கடும் அதிருப்தி எடப்பாடி, ஓபிஎஸ்சை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு: அண்ணாமலை சென்னை செல்லவும் தடை உத்தரவால் பரபரப்பு

சென்னை: அதிமுகவினர் 4 கோஷ்டிகளாக பிரிந்து மோதுவதால் கடும் அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்துப் பேச இருந்ததை ரத்து செய்து விட்டார். அதோடு அண்ணாமலையையும் சென்னைக்கு வரவேண்டாம். டெல்லியில் இருக்கும்படி மேலிடம் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக தற்போது 4 அணிகளாக உடைந்துள்ளது. அதில் கடைசியாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மோதி வருகின்றனர். இருவரும் அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று மோதி வருகின்றனர். இவர்களுடைய மோதலை அடிக்கடி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூறி வந்தனர். இவர்களது மோதல் முடியாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. அதேநேரத்தில், இருவரும் தங்களுக்குத்தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவதால் அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தேர்தலில் அதிமுக படுதோல்வி தோல்வி அடைந்தவுடன், தலைவர்கள் பிரிந்து இருப்பதால்தான் தோல்வி ஏற்பட்டது என்று அண்ணாமலை கூறினார். இதற்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுத்தனர். அதேநேரத்தில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைமையில் ஒரு அணியை உருவாக்க அண்ணாமலை தீவிரமாக முயன்று வருகிறார். இது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையில் பாஜ மாநில தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேண்டாம். என் எச்சரிக்கையை மீறி கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என அண்ணாமலை மேலிடத்தை எச்சரித்திருந்தார். அவரை உடனடியாக டெல்லிக்கு அழைத்து அமித்ஷா சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி உண்டு என்று கூறியிருந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கர்நாடக தேர்தலில் அதிமுகவின் ஆதரவை கேட்டிருந்தார். ஆனால் கர்நாடக தேர்தலில் அதிமுகவுக்கு 3 தொகுதிகள் முதல் 5 தொகுதிகளை கொடுத்தால் ஆதரவு தர தயார் என்றார். அதேநேரத்தில், அதிமுக போட்டியிடுவது உறுதி என்றும், தனக்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என்றும் எடப்பாடி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியும் கர்நாடக தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த அணியின் கர்நாடக மாநில தலைவர் புகழேந்தி, எடியூரப்பாவை சந்தித்து சீட் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதிமுக தலைவர்கள் கர்நாடகாவில் பாஜவுக்கு ஆதரவு தராமல், தங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதிலேயே குறியாக இருப்பதால் மோடியும், அமித்ஷாவும் கடும் அதிருப்பதி அடைந்தனர். மேலும், அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி நேற்று முன்தினம் அமித்ஷா அழைப்பு விடுத்தார். இதனால் உடனடியாக அவர் டெல்லி விரைந்தார். அங்கு அமித்ஷாவை சந்தித்து பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் மோடி சென்னைக்கு நேற்று வந்ததால், அவரை வரவேற்க சென்னை வருவதற்கு அண்ணாமலை பிற்பகல் 12.40 மணி விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் மோடியை வரவேற்க சென்னைக்கு செல்ல வேண்டாம். அதை ஒன்றிய அமைச்சர் முருகன் பார்த்துக் கொள்வார் என்று டெல்லி தலைமை கூறிவிட்டது. நாங்கள் சொல்லும்வரை டெல்லியை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்று தடை உத்தரவு போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் பிரதமர் மோடியை வரவேற்க சென்னைக்கு அண்ணாமலை வரவில்லை. அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

அதேநேரத்தில் சென்னைக்கு வந்த மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். அவர்களோடு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வரவேற்றனர். பின்னர் சென்னை விமானநிலையத்தில் இருந்து மைசூர் செல்வதற்காக மோடி இரவு 7.35 மணிக்கு விமானநிலையம் வந்தார். அங்கு அவர் இரவு உணவு சாப்பிட்டார். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலினை 20 நிமிடம் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, ஒன்றிய அமைச்சர் எல்.முருகனையும் சந்தித்துப் பேசினார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா ஆகியோர் காத்திருந்தனர். பிரதமர் மோடி, அவர்கள் யாரையும் சந்தித்துப் பேச மறுத்து விட்டார். இவர்கள் யாரும் பிரதமர் மோடி தங்கியிருக்கும் அறைக்கு அருகே வரவேண்டாம். விமான நிலையத்தில் புறப்படும் இடத்தில் காத்திருக்கும்படி கூறிவிட்டனர்.

இதன் காரணமாக, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே அவர்கள் தனித்தனியாக பேச தலா 5 நிமிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அது, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அமைதியாக காத்திருந்தனர். மைசூர் செல்வதற்காக மோடி வெளியில் வந்தார். அதிமுக மற்றும் பாஜ தலைவர்களை பார்த்து கும்மிட்டு, வணக்கம் சொல்லிவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார். இதனால், அண்ணாமலை சென்னைக்கு வர தடை விதித்திருப்பதும், அதிமுக தலைவர்களை தனியாக சந்தித்துப் பேசாமல் சென்றதும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • மு.க.ஸ்டாலின்-எல்.முருகனுடன் பிரதமர் மோடி சந்திப்பு சென்னையில் இருந்து மைசூர் செல்வதற்கு முன்னர் விமானநிலையத்தில் காத்திருந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20 நிமிடம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் அளித்தார். அதன்பின்னர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனையும் மோடி தனியாக சந்தித்துப் பேசினார்.

The post அதிமுக 4 கோஷ்டிகளாக பிரிந்து மோதுவதால் கடும் அதிருப்தி எடப்பாடி, ஓபிஎஸ்சை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு: அண்ணாமலை சென்னை செல்லவும் தடை உத்தரவால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Annamalai ,Chennai ,Chennai airport ,Dinakaran ,
× RELATED அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய...