×

விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் யுகேஷ்குமார் (25). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பவானி. திருமணமான இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரைப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவரது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் பவானியை யுகேஷ்குமார் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இருதரப்பு குடும்பத்தினரும், இவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். இதற்காக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அடுத்த மாதம் 25ம் தேதி யுகேஷ்குமார் மற்றும் பவானிக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டது.

அதன்படி அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பவானி தனது விவாகரத்து வழக்கு முடியவில்லை, எனவே விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம், என சில தினங்களுக்கு முன்பு யுகேஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதனால் யுகேஷ்குமாருக்கும், பவானிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த யுகேஷ்குமார் நேற்று முன்தினம் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

மாலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த யுகேஷ்குமார், வெகுநேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் மேலே சென்று பார்த்தபோது, அங்கு யுகேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யுகேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thiruvottur ,Thiagarajapuram ,Yukeshkumar ,
× RELATED வீட்டின் கூரையில் கொய்யா மரம்...