×

தலசயன பெருமாள் கோயில் திருப்பணி அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு

சென்னை: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையர் வான்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயில் பழைய மின் இணைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், புதிய மின் இணைப்புகளை போர்க்கால அடிப்படையில் அமைத்து, முதல் கட்டமாக மூலவர், உற்சவர், நிலமங்கை தாயார், பூதத்தாழ்வார், தேவி – பூதேவி, ஆண்டாள் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகளை ஆகம முறைப்படி பழமை மாறாமல் சீரமைக்க அறிவுறுத்தினார்.

இக்கோயிலில், திருப்பணிகளை செய்து வரும் ஒப்பந்ததாரரை அழைத்து தலசயன பெருமாள், தேவி- பூதேவி, ஆண்டாள், நிலமங்கைதாயார், ஆஞசநேயர், பூதத்தாழ்வார், சீதை, ராமர் ஆகிய உற்சவ மூர்திதகளின் வெண்கல நிலைகள் தற்போது கண்ணாடி அறைகளில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், அதனை பாதுகாப்பாக வைக்கும் வகையில் உற்சவர் சிலைகள் உள்ள அறைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். இதேபோல், கோயில் கோபுரங்கள ஏற்கனவே உள்ளது போன்று ஆகம விதிகளின்படி சீரமைக்கவும் அறிவுறுத்தினார். அப்போது, இந்து சமய அறநிலையத்துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், இந்து சமய அறநிலையத் துறை பொறியாளர் லால் பகதூர், தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், கோயில் தக்கார் பாஸ்கரன், கோயில் மேலாளர் சந்தானம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அப்போது, திருப்பணிகள் குறித்து இணை ஆணையர் வான்மதி நிருபர்களிடம் கூறுகையில், கோயிலில் திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. அனைத்து, பணிகளும் பழமை மாறாமல் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். ஏற்கனவே, மே 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக தெரிவித்திருந்தோம். தற்போது, வேலைகள் முழுமை பெறாமல் உள்ளதால் திட்டமிட்டபடி மே 4ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அனைத்து, பணிகளும் முழுமையாக முடிந்த பிறகு துறை அமைச்சர் மற்றும் துறை ஆணையரிடம் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தலசயன பெருமாள் கோயில் திருப்பணி அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thalasayana Perumal Temple Tirupani Department ,Chennai ,Hindu Religious Institute ,Kanchipuram ,Vanmathi ,Thalasayana Perumal Temple Tirupani ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...