×

எதிரிகளின் போர்க்கப்பல்களை அழிப்பதற்கு கடலுக்கு அடியில் மீண்டும் அணு ஆயுத டிரோன் சோதனை: வடகொரியா தொடர்ந்து அதிரடி

சியோல்: வடகொரியா கடலுக்கு அடியில் பயணித்து எதிரி கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை அழிக்கும் வகையிலான அணு ஆயுத டிரோன் சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதற்கு பதிலடி தரும் வகையில் பல்வேறு ஏவுகணைகளையும் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றது. அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத சோதனையையும் வடகொரியா நடத்தி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேற்று கடலுக்கு அடியில் டிரோன் மூலமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக வடகொரியா அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த அணு ஆயுத டிரோன் சோதனைக்கு ஹெயில் -2 என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் டிரோனாது சுமார் 71 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கு அடியில் பயணித்து கிழக்கு துறைமுக நகரமான டான்சோன் அருகே கடலில் போலி போர்கப்பலை வெற்றிகரமாக வெடிக்க செய்துள்ளதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டிரோன் சோதனை மூலமாக, கடலில் 1000கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகள் மீதும் அபாயகரமான தாக்குதல் நடத்தும் திறன்உள்ளது என்பதை வடகொரியா நிரூபித்துள்ளது. முன்னதாக கடந்த மாதம் வடகொரியா ஹெய்ல் 1 என்று பெயரிடப்பட்ட அணு ஆயுத சோதனையை நடத்தியதாக அறிவித்தது. இந்த ஹெய்ல் 1 டிரோனானது செயற்கை சுனாமியை உருவாக்கும் தன்மை கொண்டது என்றும் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் வடகொரியாவின் இந்த அச்சுறுத்தல் மிகைப்படுத்தப்பட்டது என நம்புவதாக தென்கொரியா ராணுவம் விமர்சித்துள்ளது.

The post எதிரிகளின் போர்க்கப்பல்களை அழிப்பதற்கு கடலுக்கு அடியில் மீண்டும் அணு ஆயுத டிரோன் சோதனை: வடகொரியா தொடர்ந்து அதிரடி appeared first on Dinakaran.

Tags : North Korea ,Seoul ,Dinakaran ,
× RELATED வட கொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை