×

பிரியாணி கிடைக்குமோ.. கிடைக்காதோ…கறிக்குழம்பு அண்டாவுடன் ஓட்டம் பிடித்த தொண்டர்கள்: கட்சி கூட்டத்தில் அடிதடி,மோதல்

  • மேஜை, நாற்காலிகள் சேதம்

திருமலை: தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி கூட்டத்தில், பிரியாணி கிடைக்காததால் தொண்டர்கள் முட்டி மோதி, தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம், மகபூபாத் மாவட்டம் சிரோலு நகரில் ஆளும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் கட்சி தொண்டர்களுக்கு பரிமாறுவதற்காக கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் வந்திருந்ததால், அனைவருக்கும் பிரியாணி கிடைக்காதோ என்ற எண்ணத்தில் தொண்டர்கள் ஒரு கட்டத்தில் பிரியாணிக்காக மோதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஒரு சில தொண்டர்கள் நமக்கு எப்படியும் பிரியாணி கிடைக்காது என்று முடிவு செய்து, கறி குழம்பு வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தை தூக்க முடியாமல் இழுத்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை கவனித்த மற்ற தொண்டர்கள் நாற்காலி, கட்டை ஆகியவற்றால் கறி குழம்பு பாத்திரத்தை இழுத்து சென்ற தொண்டர்களை தாக்கினர். இதனை கவனித்த பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் குறுக்கிட்டு நிலைமை கை மீறி செல்லாமல் தடுத்து நிறுத்தினர். போலீசார் தலையீடு காரணமாக அங்கு ஏற்பட இருந்த கலவரம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும், கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்களுக்கு தலைவர்கள் சாப்பாடு போட கூட கணக்கு பார்க்கின்றனர். ஆனால் நாங்கள் கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து எங்களுடைய இளமை, சொத்து, சுகம் அனைத்தையும் இழந்து விட்டோம் என்று தொண்டர்கள் குற்றம்சாட்டினர். இந்த மோதலில் அங்கு போடப்பட்டிருந்த பந்தல், மேஜை, நாற்காலிகள் ஆகியவை சேதமடைந்தது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பிரியாணி கிடைக்குமோ.. கிடைக்காதோ…கறிக்குழம்பு அண்டாவுடன் ஓட்டம் பிடித்த தொண்டர்கள்: கட்சி கூட்டத்தில் அடிதடி,மோதல் appeared first on Dinakaran.

Tags : Biryani ,Thirumalai ,Bharat Rashtriya Samiti Party ,Telangana ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் புற்றுநோய்க்கு என போலி...