×

முதுமக்கள் தாழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பை கொண்டு தற்கால மனிதர்களிடம் மரபணு சோதனை: மதுரை காமராஜர் பல்கலை. தொடங்கியது

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புகளை கொண்டு அப்பகுதியில் வாழும் மக்களிடம் மரபணு சோதனை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் துவங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட ஆய்வில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 170க்கும் மேற்பட்ட எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரே தாழிக்குள் இரு எலும்பு கூடுகளும் கிடைத்துள்ளன. ஒன்றிய அரசின் தொல்லியல் துறையால் அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் அகழாய்வு மேற்கொண்டது. ஆதிச்சநல்லூர் போன்று சிவகளையில் நடைபெற்ற அகழாய்விலும் தமிழர்களின் பாரம்பரியம் பழமைவாய்ந்தது என்பது தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் உலகிற்கு தெரிய வந்தது. கடந்த 9.9.2021 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகளையில் கிடைத்த நெல்மணிகள் கி.மு.1155ம் ஆண்டை சேர்ந்தவை.

பொருநை ஆற்றங்கரை நாகரிகம் சுமார் 3700 ஆண்டுகள் பழமையானவை என்று அறிவித்தார். ஆதிச்சநல்லூர், சிவகளை தமிழர்களின் நாகரிக தொட்டில் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆதிச்சநல்லூர் உட்பட 5 இடங்களில் மக்களின் வாழ்விடங்களை கண்டறிய அகழ்வாராய்ச்சி செய்திட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆதிச்சநல்லூரில் மக்கள் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய முதற்கட்டமாக திருக்கோளூரில் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதிகளில் வாழ்ந்தவர்களின் வாரிசுகள் தற்போதும் வாழ்கிறார்களா? என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சமூக ஆர்வலர் காந்திமதிநாதன், தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில், ஆதிச்சநல்லூர், சிவகளையில் கிடைத்த எலும்புகளை வைத்து, தற்போது அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களிடம் மரபணு சோதனை செய்து அவை ஒத்துப்போகிறதா எனவும், அவர்கள் மூதாதையர் வழியை சேர்ந்தவர்களா எனவும் கண்டறிந்து அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணை இயக்குநர் அளித்துள்ள பதிலில், ஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் கிடைத்த எலும்புகள் குறித்த ஆய்வுகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் வரலாற்று ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post முதுமக்கள் தாழிகளில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பை கொண்டு தற்கால மனிதர்களிடம் மரபணு சோதனை: மதுரை காமராஜர் பல்கலை. தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Madurai Kamaraj University ,Adichanallur, Siva ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா