×

பட்லர் –ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்: வார்னர் போராட்டம் வீண்

  • டெல்லிக்கு ஹாட்ரிக் தோல்வி

கவுகாத்தி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், 57 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. பரஸபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இருவரும் ராஜஸ்தான் இன்னிங்சை தொடங்கினர். எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்கிய இந்த ஜோடி டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தது.ஜெய்ஸ்வால் 25 பந்தில் அரை சதம் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஜெய்ஸ்வால் – பட்லர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 98 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 60 ரன் (31 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி முகேஷ் குமார் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 4 பந்துகளை சந்தித்து குல்தீப் சுழலில் டக் அவுட்டானார். ரயன் பராக் 7 ரன்னில் பெவிலியன் திரும்ப, ராஜஸ்தான் 13.5 ஓவரில் 126 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திடீர் சரிவை சந்தித்தது.

இந்த நிலையில், பட்லர் – ஹெட்மயர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, ராயல்ஸ் ஸ்கோர் மீண்டும் வேகம் எடுத்தது. 32 பந்தில் அரை சதம் அடித்த பட்லர், 79 ரன் (51 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி முகேஷ் குமார் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட்டார். கடைசி கட்டத்தில் ஹெட்மயர் தன் பங்குக்கு பவுண்டரியும், சிக்சருமாகப் பறக்கவிட்டு அசத்த… ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. ஹெட்மயர் 39 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 4 சிச்கர்), துருவ் ஜுரெல் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் முகேஷ் குமார் 2, குல்தீப், ரோவ்மன் பாவெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. ‘இம்பாக்ட்’ வீரராக பிரித்வி ஷா, கேப்டன் வார்னர் இருவரும் துரத்தலை தொடங்கினர். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா, மணிஷ் பாண்டே இருவரும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி நடையை கட்ட, டெல்லிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

ரைலீ ரூஸோ 14 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட, டெல்லி 5.4 ஓவரில் 36 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், வார்னர் – லலித் யாதவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி 64 ரன் சேர்த்தது. லலித் 38 ரன் (24 பந்து, 5 பவுண்டரி) விளாசி போல்ட் வேகத்தில் கிளீன் போல்டானார். ஒரு முனையில் உறுதியுடன் போராடிய வார்னர் 44 பந்தில் அரை சதம் அடிக்க, சக வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். வார்னர் 65 ரன் (55 பந்து, 7 பவுண்டரி) விளாசி சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் மட்டுமே எடுத்து 57 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது தோல்வியைத் தழுவியது. குல்தீப் 3, முகேஷ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சில் போல்ட், சாஹல் தலா 3, அஷ்வின் 2, சந்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ராஜஸ்தான் அணி (4 புள்ளி) ரன்ரேட் அடிப்படையில் லக்னோவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது.

The post பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடி முதலிடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான்: வார்னர் போராட்டம் வீண் appeared first on Dinakaran.

Tags : Butler-Jaiswal ,Rajasthan ,Warner ,Guwahati ,IPL T20 league ,Delhi Capitals ,Rajasthan Royals ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...