×

ரூ.2,400 கோடியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட சென்னை விமானநிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சென்னை: சென்னை விமான நிலையத்தில், பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் ரூ.2,400 கோடியில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த சென்னை விமானநிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து, விமானப்படை விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2:41 மணிக்கு வந்து சேர்ந்தார். பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, சால்வை அணிவித்து வரவேற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமருக்கு பட்டு ஜரிகை வேட்டி, சால்வை அணிவித்து, காந்தி பற்றிய நூல் ஒன்றை கொடுத்து வரவேற்றார். அப்போது பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கைகளைப் பிடித்துக்கொண்டு நலம் விசாரித்தார். இதையடுத்து ஒன்றிய இணைய அமைச்சர் எல்.முருகன் பிரதமருக்கு சால்வை அணிவித்தார். அதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, உதயநிதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, பாஜ பிரமுகர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நைனார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் உட்பட பலர் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஆனால், சிறப்பு பாதுகாப்பு படையினரான எஸ்பிஜி குழுவினர், அனைவரையும் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்க அனுமதிக்கவில்லை. அதைப்போல் மலர்கொத்து, பொக்கே போன்றவைகளுக்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி இல்லை. எனவே, வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும்பான்மையானோர், பிரதமரை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். பிரதமரும் பதிலுக்கு வணங்கினார். அதன்பின்பு மாலை 3 மணிக்கு பிரதமர் மோடி, பழைய விமான நிலையத்தில் இருந்து காரில், சென்னை புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு ரூ.2,400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி திறந்துவைத்தார். அதோடு புதிய ஒருங்கிணைந்த விமான நிலையம் பற்றிய புகைப்படங்கள், கட்டிடங்களின் அமைப்பு காட்சிகளை, பிரதமர் மோடி பார்வையிட்டார். அந்த இடத்தில் பிரதமர், கவர்னர், முதலமைச்சர், ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், இணை அமைச்சர் எல் முருகன், இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ் குமாரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

  • முதல்வரை சிரிக்கவைத்த பிரதமர்
    பிரதமருக்கு புதிய ஒருங்கிணைந்த விமான நிலைய அமைப்புக்கள் பற்றி, போட்டோக்கள் மற்றும் காட்சிகளை, விமான போக்குவரத்து துறை அமைச்சரும், இந்திய விமான நிலைய ஆணைய தலைவரும் விளக்கமாக எடுத்துக் கூறிக் கொண்டே வந்தனர். பிரதமரும் அவர்களிடம் சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டு வந்தார். அப்போது முதலமைச்சர் ஒன்றிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு வழிவிட்டு, நடந்து வந்து கொண்டு இருந்தார். இதை கவனித்த பிரதமர் மோடி, முதலமைச்சரை, அருகே வரவழைத்து கையைப் பிடித்துக் கொண்டு, நகைச்சுவையாக ஏதோ கூறினார்.

உடனே, முதலமைச்சர் சிரித்தார். பின்னர், பிரதமர் மோடியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு இருவரும் சிரித்தனர். இருவரும் சேர்ந்து சிரித்து அந்த இடத்தையே சிரிப்பலையாக மாற்றினர். அப்போது ஒன்றிய அமைச்சர்களும், கவர்னர் ஆர்.என்.ரவியும் சிரித்தனர். அதன் பின்பு பிரதமர் மோடி ஒருங்கிணைந்த புதிய விமான நிலையத்தில் இருந்து, காரில் சென்னை பழைய விமான நிலையம் சென்றார். அங்கிருந்து மாலை 3:31 மணிக்கு இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். அவருடைய ஹெலிகாப்டருக்கு முன்னும் பின்னும் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களாக, மூன்று ஹெலிகாப்டர்கள் அணிவகுத்து சென்றன.

The post ரூ.2,400 கோடியில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட சென்னை விமானநிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Chennai Airport ,Chennai ,Modi ,Chief Minister ,Mueller G.K. Stalin ,Governor ,R. N.N. Ravi ,Union ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...