×

சரித்திர நிகழ்வு

ஒன்றிய அரசின் நிலக்கரி சுரங்கத்துறை அதிரடியான ஏல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு கடலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. கடலூரில் கிழக்கு சேத்தியாத்தோப்பு, அரியலூரில் மைக்கேல்பட்டி, தஞ்சாவூரில் ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி வட்டாரங்களை இதற்காக ேதர்வு செய்தது. இங்குள்ள கிராமங்களில் விளைநிலங்களுக்கு கீழே, எவ்வளவு பழுப்பு நிலக்கரி இருக்கிறது, எவ்வளவு பரப்பில் இருக்கிறது, அவற்றையெல்லாம் தோண்டி எடுத்துச்செல்ல தொடர் வண்டிப்பாதை எவ்வளவு அருகில் உள்ளது என்பது போன்ற விவரங்களையும் அந்த ஏல அறிவிப்பில் வெளியிட்டது.

இதற்கிடையில், வடசேரி பழுப்பு நிலக்கரி வட்டாரம் என பெயரிட்டு, அப்பகுதியில் நிலக்கரி திட்டத்திற்காக 66 ஆழ்துளை கிணறுகளும், அரியலூர் உடையார்பாளையம் மைக்கேல்பட்டி நிலக்கரி வட்டாரத்தில் 19 ஆழ்துளை கிணறுகளும் அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தது. இந்த பகுதிகளில் நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனங்கள் ஏலம் கேட்கலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. ஏலம் கேட்க 2023 மே 30ம்தேதி கடைசிநாள் என்றும், நிலக்கரி சுரங்கத்துறையின் தேர்வுக்குழு 2023 ஜூலை 14ம்தேதி, தேர்வு செய்யப்பட்ட ஏலதாரர் பட்டியலை ஒன்றிய அரசுக்கு அனுப்பும் என்றும் சுரங்கத்துறை சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

இதன்படி, வடசேரி நிலக்கரி வட்டாரத்தில் டெல்டாவின் தலைநகரமான தஞ்சாவூர் மாவட்டத்தின் கீழக்குறிச்சி, ஆவிக்கோட்டை, அண்டமி, மோகூர், கருப்பூர், பரவாத்தூர், கண்ணுகுடி, கொடியாளம், வடசேரி ஆகிய ஊர்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் மகாதேவப்பட்டினம், உள்ளிக்ேகாட்டை, கண்டிதம்பேட்டை, கண்ணாரப்பேட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை கிராமங்களில் பசுமை பரப்பும் நெல் வயல்களில் நிலக்கரி எடுக்கப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இப்படி ஒன்றிய அரசு அதிரடியாக அறிவித்து, அதகளம் காட்டிய பகுதிகள் அனைத்தும் காவிரி பெருக்கெடுத்து ஓடும் வளமான விளைநிலங்கள் சூழ்ந்தது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் உணவளிக்கும் டெல்டா பாசனப்பரப்புகள் என்ற பெருமைக்குரியது. உணவுக்கு மட்டுமன்றி உயிர்தாங்கும் குடிநீருக்கும் ஆதாரமாக நிற்பது ெடல்டாவின் தனிச்சிறப்பு. நவீன திட்டங்கள் என்ற பெயரால், இங்குள்ள நிலங்களை சூறையாடுவது பெரும் அபத்தம். இதனால் வளங்களை இழந்து, பாசனங்கள் பாலையாகி பாழ்பட்டு விடும் என்பது தஞ்சை சீமை மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்மக்களின் உதிரத்தில் கலந்த உணர்வு. இதன் எதிரொலியாக ஓங்கி ஒலித்தது நிலக்கரி எடுப்பதற்கு எதிரான போராட்டக்குரல்கள். இந்நிலையில் மண்ணின் பெருமை உணர்ந்து, மக்களாட்சி நடத்தும் தமிழ்நிலத்தின் முதல்வரும், மக்களின் குரலை ஒன்றிய அரசிடம் வெளிப்படுத்தினார்.

‘மதிப்பு மிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பு பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாலும் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாதோப்பு கிழக்கு என்று 3 சுரங்க வட்டங்களையும் ஏலத்தின் 7மற்றும் 17வது தவணையில் இருந்து விலக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொதுஅறிவிப்புகள் வெளியிடும் முன்பு ஒன்றிய அரசு, மாநிலஅரசின் தொடர்புடைய துறைகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்’’ என்று பிரதமருக்கு கண்ணியமாக முதல்வர் கடிதம் வரைந்தார். இதற்குரிய பலன், தமிழ்நிலத்தில் பிரதமர் கால்பதித்த நேரத்தில் கிடைத்துள்ளது. டெல்டா பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த நிலக்கரி சுரங்கத்திற்கான ஏலப்பணிகளை விலக்கிக் கொள்வதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சர்ச்சைகள் வேண்டாம் என்று ஒன்றிய அரசு, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது நிதர்சனம். பெரும் அபாயத்தில் இருந்து, மீண்டும் டெல்டா மீட்டெடுக்கப்பட்டுள்ளது ஒரு சரித்திர நிகழ்வு.

The post சரித்திர நிகழ்வு appeared first on Dinakaran.

Tags : Coal Mining Department of the Union Government ,Cuddalore ,Ariyalur ,Thanjavur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...