×

கள்ளிக்குப்பம் சுடுகாட்டில் அடிப்படை வசதி: பொதுமக்கள் வலியுறுத்தல்

அம்பத்தூர்: சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என கள்ளிக்குப்பம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் மண்டலம் கள்ளிக்குப்பம் பகுதியில் கங்கை நகர், தென்றல் நகர், சக்தி நகர், மூகாம்பிகை நகர், இந்துஸ்தான் நகர், காந்தி நகர், பசும்பொன் நகர், பசும்பொன் நகர் மேற்கு, பசும்பொன் நகர் விரிவாக்கம், பாலவினாயகர் நகர், மலர் நகர், சீனிவாசன் நகர், ஓம்சக்தி நகர், கந்தகோட்ட நகர், பாலாஜி நகர், மேற்கு பாலாஜி நகர், முத்தமிழ் நகர் உட்பட 50க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன.

1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஒரே ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு தகன மேடை இல்லாததால் சடலங்களை திறந்த வெளியில் எரிக்கும் நிலை உள்ளது. மழை காலங்களில் சடலம் பாதியில் எரிந்தும் எரியாமலும் எலும்பும் சதையுமாக மண்டை ஓடுமாக துர்நாற்றம் வீசுகிறது. சடலங்களை புதைப்பதற்கு போதுமான இடவசதி இல்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதுதொடர்பாக அம்பத்தூர் மண்டல தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை மனு புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டுகின்றனர். மேலும் சுடுகாட்டில் தேவையான தண்ணீர் வசதி, மின்சார வசதி மற்றும் தகுந்த பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. சுடுகாடு பகுதியில் செடிகொடி வளர்ந்து காடுபோல் உள்ளதால் இங்கு மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, அரை நிர்வாணமாக தூங்குவது போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதுகுறித்து 82வது வார்டு உறுப்பினர் ரமேஷ் கூறுகையில், ‘சுடுகாட்டை சீரமைக்க கடந்த 5 மாதங்களுக்கு முன்பே 9,10,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றார். ஆனால் இதுவரை பணி தொடங்கப்படவில்லை. எனவே, கள்ளிக்குப்பம் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுடுகாட்டுக்கு அடிப்படை வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கள்ளிக்குப்பம் சுடுகாட்டில் அடிப்படை வசதி: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kolukalukam Shudukat ,Kallukalupam ,Shudugat ,Ambathur Zone Kullupam ,Cupil ,Shukat ,Dinakaran ,
× RELATED அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில்...