×

அதிமுக ஆட்சியில் போலீஸ் வாகனங்களுக்கு டீசல் வாங்கியதில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு செய்த புகாரில் சேலம் மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் இடமாற்றம்!

சேலம்: சேலம் மாநகர ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில், டீசல் போட்டதில் ரூ2கோடி மோசடி நடந்ததாக வந்த புகாரையடுத்து, 3 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவு செயல்பட்டு வருகிறது.

இங்கு பணியாற்றிய எழுத்தர் உள்பட 4 பேர், வாகனங்களுக்கு போடும் டீசலை மோசடி செய்து, பல கோடி ரூபாய் அபேஸ் செய்ததாக அதிகாரிகளுக்கு புகார் கடிதங்கள் வந்தது. அதில், கடந்த 7 ஆண்டுகளாக ஓடாத வாகனங்கள் ஓடியதாகவும், 2014ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தலில் வாகனங்களுக்கு போலியான வாடகை தொகை, எரிபொருள் நிரப்புவது, பழுதான வாகனங்களுக்கு டீசல் போட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் பணிக்காக ஓடிய கான்வாய் வாகனங்கள் தவிர, ஓடாத மற்றும் ஓடுவதற்கு தகுதியில்லாத 12 வாகனங்கள் ஒவ்வொன்றுக்கும் 300 லிட்டர் வீதம் டீசல் பிடிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சுமார் 2 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் என 1460 லிட்டர் டீசல் பிடித்ததாக மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை கவனித்து வந்த ஒரு எஸ்ஐ உள்பட 4 போலீசார், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு நபர் நிலம், வீடு, நகை என 55 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகார் மனு தமிழக முதல்வர், டிஜிபி, வருமான வரித்துறை, நிதியமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, புகாருக்கு ஆளான எஸ்.ஐ., ஒருவர், ஊர்காவல் படைக்கும் 2 ஏட்டுக்களில் ஒருவர், டவுன் குற்றப்பிரிவுக்கும், மற்றொரு ஏட்டு மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த மோசடி நடைபெறவில்லை என மறைப்பதற்கும் ஒரு சிலர் முயன்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்றனர்.

The post அதிமுக ஆட்சியில் போலீஸ் வாகனங்களுக்கு டீசல் வாங்கியதில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு செய்த புகாரில் சேலம் மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் இடமாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Salem Municipal Armed Force Police ,UPA ,Salem ,Salem Mauritational Armed Force Motor Vehicle Division ,Assistant ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...