×

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்: கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள், அதிமுக, பாஜக தலைவர்கள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை கோவை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து 1.35 மணிக்கு புறப்பட்டார். சரியாக 2.45 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பன்னாட்டு விமானநிலைய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், மாநில அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

அதைதொடர்ந்து 3.20 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து கடற்படைக்கு சொந்தமான தனி ஹெலிகாப்டர் மூலம், அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு வருகிறார். பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகிறார். பிறகு 4.20 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கின்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடைகிறார். இந்த விழாவில், ஒன்றிய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ஜோதிராதித்ய சிந்தியா, எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, மற்றும் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பின்னர் சாலை மார்க்கமாக காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் மாலை 4.45 மணிக்கு பிரதமர் கலந்து கொள்கிறார். அங்கு நிகழ்ச்சி முடிந்து 5.45 மணிக்கு சாலை மார்க்கமாக அடையார் ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு செல்கிறார். பிறகு 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் 6.20 மணிக்கு விமான நிலையம் அடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு செல்கிறார். அந்த விழாவிலும் கவர்னர், முதல்வர், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை விமானநிலையம் வரும் பிரதமர் மோடி 45 நிமிடம் விமானநிலையத்தில் தங்கியிருக்கிறார். அதன்பின்னர், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் மோடியை தனித்தனியாக சந்தித்துப் பேசுகின்றனர். தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை மாநகரம் முழுவதும் குறிப்பாக மெரினா காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, சென்ட்ரல் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் உட்புற சாலைகள், விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் ஜிஎஸ்டி சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் போலீசார் தங்களது பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்துள்ளனர். விழா நடைபெறும் பகுதிகள் மட்டுமல்லாது சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார்: கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர் appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai ,Governor R. N.N. Ravi ,Principal ,G.K. Stalin ,PM Modi ,BCM ,Governor R.R. N.N. Ravi ,
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...