×

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பலூன் பறிமுதல்: மதுரவாயல் அருகே பரபரப்பு

பூந்தமல்லி: சென்னையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 370 கறுப்பு பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னைக்கு இன்று வரும் பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி சார்பில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் பிரமுகர்கள் கறுப்புக்கொடி மற்றும் ‘கோ பேக் மோடி’ எனும் வாசகத்துடன் கூடிய கறுப்பு பலூன்களை வைத்திருக்கிறார்களா என நேற்றிரவு சென்னை மற்றும் புறகநர் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து, அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில், மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் எஸ்சி,எஸ்டி பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் வீட்டில் ‘கோ பேக் மோடி’ என்ற வாசகம் அச்சிடப்பட்ட கறுப்பு பலூன்கள் மறைத்து வைத்திருப்பதாக நேற்றிரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்ற, ரஞ்சன்குமார் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு, பிரதமர் மோடிக்கு எதிராக பறக்கவிட 370 கறுப்பு பலூன்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர் வீட்டிலிருந்த வெளியே வராதபடி, அவரது வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

The post பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பலூன் பறிமுதல்: மதுரவாயல் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : PM ,Congress ,Maduravayal ,Poonthamalli ,PM Modi ,Chennai ,Madurawayal ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…