×

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்த்த முடிவு

கோவை: தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சப்பிரமணியன் கூறினார். நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். இதில், தமிழ்நாடு அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசின் வழிகாட்டு விதிமுறைகளை ஏற்று வரும் 10, 11ம் தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னையில் மரபணு பரிசோதனை மையம் ரூ.4 கோடி செலவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா பாதிப்பு, அதன் வீரியம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவமனைகளில் 24,061 ஆக்சிஜன் வசதி, 2,067 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிப்பு அமைப்பு தயார் நிலையில் உள்ளது. நூறு சதவீதம் ஆக்சிஜன், மருந்துகள் கையிருப்பில் உள்ளது.

தமிழகத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் ஆலோசனை கூட்டத்தில் இந்தியா முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தினர். அதன்படி, தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக, கேரள எல்லை பகுதியில் கொரோனா தொடர்பாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்த்த முடிவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Govai ,Corona Trials ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...