×

ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவது ஆளுநருக்கு அழகல்ல: கே.பி.முனுசாமி கண்டனம்

கிருஷ்ணகிரி: மக்களின் உணர்வுகள் அடிப்படையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவது, ஆளுநருக்கு அழகல்ல என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில், புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ., பங்கேற்று, புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவங்களை வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மக்களின் உணர்வுகள், கோரிக்கைகளை ஏற்று, ஆட்சியாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், அதுபற்றி பொது வெளியில் பேசுவது ஆளுநருக்கு அழகல்ல. அவர் இது போன்ற கருத்துக்கள் கூறுவது வேதனை அளிக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, நிராகரிக்கப்பட்டது என கவர்னர் தெரிவித்துள்ளது, அவருடைய கருத்து.

அதுபற்றி விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக போட்டியிடுவது குறித்து பொதுச்செயலாளர் முடிவெடுப்பார். வாய்ப்பு இருந்தால், நாளை சென்னை வரும் பிரதமரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். இரு தலைவர்களும் என்ன பேசுவார்கள் என்று, என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார். அவரிடம், ஓபிஎஸ் குறித்து கேள்வி எழுப்பிய போது, ‘எடப்பாடி தலைமையில் மட்டுமே அதிமுக செயல்படுகிறது,’ என்றார்.

The post ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேசுவது ஆளுநருக்கு அழகல்ல: கே.பி.முனுசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,K. GP ,Munusamy ,Krishnagiri ,Munusami ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...