×

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி, கடந்த 2ம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேவாலயங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. இதில் சிலுவையில் இயேசு அறையப்பட்ட போது அவர் பேசிய 7 வார்த்தைகளை கிறிஸ்தவர்கள் தியானம் செய்தனர்.

மேலும், அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள், இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் சிலுவைப்பாடு நிகழ்ச்சியும் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர். சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாக சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டனர். சென்னை சூளைமேடு தூய பவுல் ஆலயத்தில் புனித வெள்ளி ஆராதனை சிறப்புடன் நடந்தது.

இதில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். சிறப்பு செய்தியாளராக சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்துகொண்டு இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தையில் மூன்று வார்த்தை பேசினார். பின்பு அனைத்து மக்களுக்கும் இறையாசி வழங்கினார். அப்போது, ஆலயத்தின் ஆயர் சாமுவேல் உடனிருந்தார். அதேபோல, சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இயேசு உயிரித்தெழுந்த நாளான வரும் 9ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

The post புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Christians ,Grey Mercury ,Easter ,Holy Friday ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...