×

அமைச்சர் கே.என்.நேரு தகவல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 திட்டம் விரைவில் தொடக்கம்

திருச்சி: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை அருகே மாநகராட்சி சார்பில் ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்டுள்ள சாலையோர மணல் திட்டுக்களை சுத்தம் செய்யும் 2 வாகனங்கள் மற்றும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வாங்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ள 100 மின்கல வாகனங்களை தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை இதைவிட யாரும் நேர்மையாக நடத்த முடியாது. மிகவும் நேர்மையாக தேர்தல் நடந்துள்ளது. நகர்புற ஜல்ஜீவன் திட்டத்தில் 50% மாநில அரசும், 50% மத்திய அரசும் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எந்த மாநில அரசிடமும் இவ்வளவு நிதி இல்லை. எனவே ஏற்கனவே உள்ளதுபோல் 75 % மத்திய அரசும், 25 % மாநில அரசும் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். நான் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்தி உள்ளேன்.தமிழகத்தில் நகர்புறங்களில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. 2021ம் ஆண்டு கணக்குப்படி 52 சதவீதம் பேர் நகர்புறங்களில் வாழ்கின்றனர். 2030ல் இது 60 சதவீதமாக உயரும். எனவே நகர்புற ஜல்ஜீவன் திட்டத்தை மத்திய அரசு 75%, மாநில அரசு 25% என்ற முறையில் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக முதல்வரும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் விரைவில் தொடங்கப்படும். இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முறைப்படி அறிவிப்பார்.  திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்….

The post அமைச்சர் கே.என்.நேரு தகவல் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 திட்டம் விரைவில் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Minister ,K. N.N. Nehru ,Trichy ,K.K. ,N.N. Nehru ,Trichy Annagar ,Dinakaran ,
× RELATED திருச்சி உறையூரில் கழிவு நீர் கலந்த...