×

ஈரோடு கிரானைட் அதிபர் வீட்டில் கொள்ளை; பெங்களூரு வாலிபர்கள் 2 பேர் கைது: நகை, பணம் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் கிரானைட் அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து நகைகள், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஈரோடு பழையபாளையம் கீதா நகரை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி மஞ்சுளா தேவி (55). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். செந்தில்குமார் கடந்த 12 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். மஞ்சுளாதேவி கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் தற்போது அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார்.

இதனால் மஞ்சுளா தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர், கடந்த மாதம் 8ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, சாமி தரிசனம் செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள காளி கோயிலுக்கு சென்றார். பின்னர், அவர் கடந்த மாதம் 15ம் தேதி ஈரோடு வந்தார். அப்போது மஞ்சுளா தேவியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த லாக்கரும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 ஜோடி வைர கம்மல், ஒரு ஜோடி வைர வளையல், 4 வைர மோதிரங்கள், 7 ஜோடி தங்க கம்மல், 3 தங்க மோதிரம், 4 தங்க வளையல்கள், 3 தங்க பவள மாலை மற்றும் தங்ககாசு, நெக்லஸ் என மொத்தம் 42 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் ஈரோடு வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது அவர்கள் பெங்களூரை சேர்ந்த குணா (22), நவீன்குமார் (23) ஆகியோர் என்பதும், கஞ்சா, மது போதைக்கு பணம் தேவைப்பட்டதால் மஞ்சுளா தேவி வீட்டில் கொள்ளை அடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குணா, நவீன்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 42 பவுன் உருக்கப்பட்ட தங்கம், ரூ.6 லட்சம் வைர நகைகள், ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் 2 வாகனம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குணா, நவீன்குமார் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஈரோடு கிரானைட் அதிபர் வீட்டில் கொள்ளை; பெங்களூரு வாலிபர்கள் 2 பேர் கைது: நகை, பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Erode Granite ,Erode ,Bangalore ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து