×

அண்ணாமலை பற்றி அமித்ஷாவிடம் எடப்பாடி புகார்: கர்நாடகா தேர்தலில் 5 சீட் கேட்கும் அதிமுக

சென்னை: அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் மோதல் முற்றியுள்ளநிலையில், அமித்ஷா, நட்டா ஆகியோரிடம் அண்ணாமலை பற்றி தம்பித்துரை மூலம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதோடு கர்நாடகா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட 5 சீட் கேட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் இருந்தது. இந்த மோதல் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலைக்குமான மோதலாக உருவெடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தது.

தற்போது தேர்தலில் படுதோல்விக்கு அதிமுக பிரிந்து இருந்ததே காரணம் என்று அண்ணாமலை கூறியதால், மோதல் மீண்டும் வலுத்தது. இந்தநிலையில்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று அண்ணாமலை அறிவித்தார். அதன்பின்னர் அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து மோதல் அதிகமானது அப்போது அதிமுக குறித்தும், கூட்டணி குறித்தும் அண்ணாமலையின் பேட்டி குறித்து வீடியோவாக தயாரித்த எடப்பாடி பழனிச்சாமி, அதை இந்தி மொழியில் மொழி பெயர்த்தார். பின்னர் அதை தனியாக ஒரு சிடி தயாரித்து, தம்பித்துரையிடம் வழங்கினார். தம்பித்துரை நேற்று முன்தினம் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசினார். பின்னர் நேற்று நட்டாவை சந்தித்துப் பேசினார்.

இரு தலைவர்களையும் தம்பித்துரை சந்தித்தபோது அண்ணாமலை பேசிய வீடியோவின் இந்தி மொழியாக்கத்தை கொடுத்து புகார் செய்துள்ளார். அப்போது அண்ணாமலையை உடனடியாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான போரில் ஓரளவுக்கு எடப்பாடி வெற்றி பெற்று வருகிறார். அதிமுக எடப்பாடியின் கைக்கு வந்து விட்டது. அதை பாஜக அங்கீகரிக்கும் வகையில், கர்நாடகா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கத் தயார். ஆனால் 5 சீட் வேண்டும் என்று எடப்பாடி கேட்டுள்ளார். இதை தம்பித்துரை மூலம் தெரிவித்தார். அதற்கு விரைவில் தெரிவிக்கிறோம். முதலில் பாஜகவுக்கு கர்நாடகா தேர்தலில் ஆதரவு என்பதை அறிவியுங்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. இதனால் கொஞ்சமாக ஓட்டு வைத்துள்ள கட்சிகளைக் கூட பாஜக தனது அணியில் சேர்த்து வருகிறது. கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குறைந்தது 15 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் அளவில் உள்ளனர். இதனால், திமுக, அதிமுக, பாமகவுக்கு அங்கு செல்வாக்கு உள்ளது. அதில் அதிமுக, பாமகவின் ஆதரவைப் பெற அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இதற்காகத்தான் எடப்பாடியிடம் அமித்ஷா சில நாட்களுக்கு முன்னர் பேசி ஆதரவு கேட்டார். போனில் ஆதரவு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, வெளிப்படையாக அறிவிக்காமல் உள்ளார்.

அதிமுகவுக்கு 3 சீட்டு முதல் 5 சீட்டுகள் வரை கொடுத்தால் வெளிப்படையாக ஆதரவு கொடுக்கத் தயார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதற்கு முக்கிய காரணம், பாஜகவே தனக்கு சீட் வழங்கினால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு வழங்கிவிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுகிறார். இதற்காகத்தான் சீட்டு கேட்டு வருகிறார். மேலும் பாஜகவுக்கு குறிப்பிட்ட அளவுக்கு தேர்தல் செலவையும் ஏற்கத் தயார் என்றும் எடப்பாடி அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமித்ஷா, அதிமுகவுக்கு சீட் வழங்குவாரா அல்லது எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி ஆதரவு மட்டும் கேட்பாரா என்ற பரபரப்பு அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று காலை 10:05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அதற்காக அண்ணாமலை இன்று காலை 9:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். அப்போது அண்ணாமலை, ‘எனக்கு விமானத்திற்கு நேரமாகிவிட்டது. போர்டிங் குளோஸ் பண்ணி விடுவார்கள். எனவே நான் போய்விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு, அவசரமாக விமான நிலையத்திற்குள் சென்று விட்டார். பிரதமர் மோடி நாளை சென்னை வர இருக்கின்ற நிலையில், அண்ணாமலை, தற்போது அவசரமாக திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணாமலை இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

The post அண்ணாமலை பற்றி அமித்ஷாவிடம் எடப்பாடி புகார்: கர்நாடகா தேர்தலில் 5 சீட் கேட்கும் அதிமுக appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Amit Shah ,Annamalai ,AIADMK ,Karnataka ,Chennai ,Edappadi Palanichami ,Natta ,Thambithurai ,
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!