×

குன்றத்தூரில் இரவு நேரத்தில் குட்கா கடத்தி வந்த இருவர் கைது: 400 கிலோ குட்கா பறிமுதல்

குன்றத்தூர்: குன்றத்தூரில் இரவு நேரத்தில் குட்கா கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 2 மினி வேன் மற்றும் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக குன்றத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இரவு நேரங்களில் எடுத்து செல்லப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்.இன்ஸ்பெக்டர் தீர்த்தகிரி ஆகியோர் தலைமையில் குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த 2 மினி வேன்களை மடக்கி சோதனை நடத்தினர்.

அதில் வந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். பின்னர், வாகனங்களை தீவிர சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் (24), முத்துக்குமார் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் குன்றத்தூர் சமயபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பெங்களூரில் இருந்து குட்கா மொத்தமாக கடத்தி வந்து அவற்றை குன்றத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து 2 மினி வேன்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர்களுக்கும், கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் சென்றால் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என்பதற்காக, இரவு நேரத்தில் குட்கா கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post குன்றத்தூரில் இரவு நேரத்தில் குட்கா கடத்தி வந்த இருவர் கைது: 400 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : gudka ,Kuntattur ,Kuddharatur ,Kuntathur ,Dinakaran ,
× RELATED கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!