×

சேலத்தில் மாம்பழ சீசன் துவக்கம் இமாம்பசந்த், பெங்களூரா ரகங்கள் வரத்து அதிகரிப்பு: வியாபாரிகள் தகவல்

சேலம்: சேலம் மார்க்கெட்டில் மாம்பழ சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இமாம்பசந்த், சேலம் பெங்களூரா மாம்பழங்களின் வரத்து தற்போது 25சதவீதமாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகளவில் 40 சதவீதம் உற்பத்தி இந்தியாவில் நடக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விருதுநகர், தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, செந்தூரா, நடுசாளை, குண்டு, இமாம்பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் மா மரங்களில் பூ பூக்கும். இவை நன்கு வளர்ந்து ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விளைச்சல் தரும். கடந்தாண்டு பெய்த மழையால் மாமரங்களில் பூ பூக்கும் தருவாயில் மழை பெய்ததால் பூக்கள் கொட்டியது. இதன் காரணமாக காய் பிடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் வெளி மாநிலங்களில் மா விளைச்சல் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாம்பழம் வியாபாரிகள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், வலசையூர், ஏற்காடு அடிவாரம், கருமந்துறை, பகடுப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. சீசன் ேநரத்தில் 100 முதல் 150 டன் மா மகசூல் கிடைக்கிறது. மாங்காய் விளைச்சலை பொறுத்தமட்டில் டிசம்பர் மாதத்தில் பூ பூக்கும் நேரமாகும். இந்த நேரத்தில் மழை பெய்தால் பூ பூப்பது குறையும். நடப்பாண்டு நவம்பரை தொடர்ந்து டிசம்பரிலும் மழை கொட்டியது.

இதனால், மா மரங்களில் பூக்கள் உதிர்ந்தது. இதன் காரணமாக நடப்பாண்டு மாங்காய் விளைச்சலில் சற்று காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் மாங்காய் விற்பனைக்கு வரும். ஆனால் நடப்பாண்டை பொறுத்தமட்டில் ஏப்ரல் பிற்பகுதியில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது, குண்டு மற்றும் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு பிறகு மே 1ம் தேதிக்கு மேல் குதாதத், மல்கோவா, செந்தூரா, நடுசாளை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மா விளைச்சல் சற்று பாதித்திருந்தாலும், கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் விளைச்சல் அமோகமாக உள்ளது. அதனால் நடப்பாண்டு அங்கிருந்து தமிழகத்திற்கு மாங்காய்கள் விற்பனைக்கு வரவாய்ப்புள்ளது. சேலம் மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மாங்காய் மொத்த வியாபாரிகள் உள்ளனர். இங்கு விற்பனைக்கு வரும் மாங்காயை சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த மாதம் வரை வரத்து வெறும் 5 சதவீதமாக இருந்தது. நடப்பு வாரம் தொடக்கத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மாம்பழம் ரகத்தை பொறுத்து ரூ.130 முதல் ரூ.200வரை விற்கப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

The post சேலத்தில் மாம்பழ சீசன் துவக்கம் இமாம்பசந்த், பெங்களூரா ரகங்கள் வரத்து அதிகரிப்பு: வியாபாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Saleam Imampasant, ,Bangalore ,Salem ,Salem Market ,Imampasant ,Saleam Imampasant ,Dinakaran ,
× RELATED ஜூலை 1ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்..!!