×

பரமக்குடி அருகே பாண்டியரின் வியாழவரி சிற்பம் கண்டுபிடிப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே கிராமத்தில் பிற்கால பாண்டியரின் வியாழவரி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே வழிமறிச்சான் கிராமத்தின் சோனியேந்தல் கண்மாய் பகுதியில் வியாழவரி சிற்பம் மற்றும் வாமன அவதாரக் குறியீடான கோட்டோவியத்தை, தென்னக வரலாற்று மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், வழிமறிச்சான் சிவா, ராமர், ஹரிகரன் ஆகியோர் சென்று கள ஆய்வு செய்தனர்.

இச்சிற்பம் பற்றி அவர்கள் கூறியதாவது, இந்த துண்டு கல் இரண்டரை அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. கோயிலின் கருவறையின் அதிட்டானப் பகுதியில் அல்லது மண்டபத்தின் அதிட்டானப் பகுதியில் வரக்கூடிய வியாழவரி என்னும் யாளி சிற்பங்கள் படைக்கப் பெற்ற சிறிய அதிட்டானப் பகுதியின் சிதறிய துண்டு கல் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.
உடைந்த இந்த துண்டு கல்லில் ஒரு புறம் மூன்று வியாழவரி சிற்பமும் மறுபுறம் வாமன அவதாரக் குறியீடுகளான கமண்டலம், குடை, ஒரு குச்சியை பாம்பு சுற்றியதுபோல் கோட்டோவியம் இடம் பெற்றுள்ளது. இவை பெருமாளின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரமாகும்.

இப்பகுதியில் பாண்டியர்களின் பழமையான கோயில் ஒன்று இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் இயற்கை சீற்றங்களால் அல்லது அந்நிய படையெடுப்பால் அக்கோயில் சிதைந்து இருக்கலாம். அதில் உள்ள ஒரு துண்டு கல்லைத் தான் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பிற்கால பாண்டியரின் கலைப் பாணி இதில் உள்ளது. இப்பகுதியில் இன்னும் ஆய்வு செய்தால் சிதைந்த கோயில் கட்டுமானங்களை கண்டுபிடிக்கலாம் என்றனர்.

The post பரமக்குடி அருகே பாண்டியரின் வியாழவரி சிற்பம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Jupiter ,Pandier ,Ramanathapuram District ,Varadirithan Village ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்