×

நெடுஞ்சாலை பணிக்காக சுடுகாடு கையகப்படுத்தியதால் அவதி; மாற்று இடம் வழங்காததால் திறந்த வெளியில் சடலம் எரிப்பு: தாசில்தார், போலீசார் வந்ததால் காக்களூரில் பரபரப்பு

திருவள்ளூர்: காக்களூர் சுடுகாடு, நெடுஞ்சாலை பணிக்காக கையகப்படுத்தியதால் மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால் இறந்தவர் உடலை திறந்த வெளியில் பொதுமக்கள் எரித்தனர். இதையறிந்த தாசில்தார், போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். திருவள்ளூர் ஒன்றியம் காக்களூர் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாராவது இறந்தால், உடல்களை அடக்கம் செய்வதற்கான சுடுகாடு, காக்களூர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், நெமிலிச்சேரி-திருப்பதி இடையே காக்களூர் வழியாக ரூ.364 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில், காக்களூர் சுடுகாடும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள், சுடுகாடு இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நேற்று திடீரென இறந்தார். அவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் மற்றும் அந்த ஊர் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இறுதி சடங்குகள் அனைத்தும் முடிந்து இன்று தகனம் செய்வதற்காக உடலை ஊர்வலமாக சுடுகாடுக்கு எடுத்து வந்தனர். நெடுஞ்சாலை துறை சுடுகாட்டு இடத்தை கையகப்படுத்தியதால் திறந்த வெளியில் கார்த்திகேயனின் உடலை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து திருவள்ளூர் தாசில்தார் மதியழகன் மற்றும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அப்போது, பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். ‘பல தலைமுறைகளாக எங்கள் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை நெடுஞ்சாலை பணிக்காக அந்த துறையினர் கையகப்படுத்தி கொண்டனர். இதனால் நாங்கள் சுடுகாடு இல்லாமல் தவிக்கிறோம். மாற்று இடம் வழங்கும்படி பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் எங்களது சுடுகாட்டிலேயே கார்த்திகேயனின் உடலை தகனம் செய்துள்ளோம். எங்களுக்கு நிரந்தர சுடுகாடு ஒதுக்கி தர வேண்டும்’ என்று அவர்கள் கூறினர். இதையடுத்து அலுவலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு வரும்படி கூறிவிட்டு தாசில்தார் புறப்பட்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். சிலர், பேச்சுவார்த்தைக்காக திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்துக்கு விரைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெடுஞ்சாலை பணிக்காக சுடுகாடு கையகப்படுத்தியதால் அவதி; மாற்று இடம் வழங்காததால் திறந்த வெளியில் சடலம் எரிப்பு: தாசில்தார், போலீசார் வந்ததால் காக்களூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Awadi ,Dasildar ,Kakalur ,Sugadu ,Dinakaran ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!