×

கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனை வாங்க கடன் உதவி: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மீதான மானியக்கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்தார். இதன்பின்னர், பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

  • சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2 புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் அமைக்கப்படும்.
  • மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு 5 சதவீதம் என்கிற குறைந்த வட்டியில் தமிழ்நாடு தலைமைக் கூட்டுறவு வங்கியே கடனுதவி வழங்கும்.
  • நீலகிரி மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பந்தலூர் மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
  • சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 2 மலைவாழ்மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும்.
  • ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் துவங்கப்படும்.
  • கூட்டுறவு சங்கங்களில் வசூல் ஆகாமல் நிலுவையிலுள்ள தவணை தவறிய பண்ணை சாராக் கடன்கள் மற்றும் இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கு சிறப்பு கடன் தீர்வுத் திட்டம் 2023-24 செயல்படுத்தப்படும்.
  • கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டுமனை வாங்க கடன் உதவி வழங்கப்படும்.
  • நாட்டுபுறக் கலைஞர்கள், பாரம்பரிய இசைக்கருவி மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலம் சிறப்புக் கடனுதவி வழங்கப்படும்.
  • கூட்டுறவு வங்கிகளின் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமானக் கடன் வழங்கப்படும்.
  • ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கடன் வழங்கப்படும்.
  • கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 லிருந்து 70 ஆக உயர்த்தப்படும். மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொதுமேலாளர்களுக்கு பொதுப்பணி நிலைத்திறன் நடைமுறைப்படுத்தப்படும்.
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பணியிடத்திற்கான நுழைவுப் பணியிடங்களையும் பொதுப்பணி நிலைத்திறன் கீழ் கொண்டுவரப்படும்.
  • தருமபுரி, நெல்லை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் பாதுகாப்பு பெட்டகங்கள் வைக்கப்படும்.
  • அரூர், ஊத்தங்கரை ஆகிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் உலர்களம் மற்றும் அரவை அலகு அமைக்கப்படும்.
  • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என தனி மாவட்டக் கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையம் துவங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் அமைக்கப்படும்.
  • நாகப்பட்டினம் பிரதம கூட்டுறவுப் பண்டகசாலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைக் பண்டகசாலையாக தரம் உயர்த்தப்படும்.
  • திருவாரூர் மாவட்டம், பாமணியில் துத்தநாக சல்பேட் அலகு அமைக்கப்படும்.
  • திருவாரூர் மாவட்டம் பாமணி மற்றும் திண்டுக்கல் மாவட்டம், எரியோடு ஆகிய இடங்களில் இரண்டு மண்புழு உர உற்பத்தி அலகுகள் அமைக்கப்படும்.
  • உங்கள் தொகுதியில் முதல்வரின் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம், கடநாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நியாயவிலைக் கடை மற்றும் கிடங்குடன் கூடிய புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.
  • தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு ஐந்து புதிய கிளைகள் துவங்கப்படும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,500 நியாயவிலைக் கடைகள் பொலிவூட்டப்படும்.
  • 5 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் ஐஎஸ்ஓ 9001 தரச்சான்றிதழ் பெறப்படும். திருவள்ளூர் மாவட்டம் திரூரில் ஒரு கூட்டுறவு அருங்காட்சியகம் அமைக்கப்படும். 2 ஆயிரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றப்படும்.
  • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், காரிங்கராயன்பாளையம் பகுதி செம்மாண்டம்பாளையத்தில் உள்ள பழுதடைந்த நியாய விலைக் கடைக்கு பதிலாக புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டப்படும்.இவ்வாறு கூட்டுறவுத் துறையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

The post கூட்டுறவு வங்கிகள் மூலம் வீட்டுமனை வாங்க கடன் உதவி: கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakarappan ,Chennai ,Assembly on Cooperatives ,Tamil Nadu Law Council ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்