×

கீழடி அருங்காட்சியகம் அருகே உள்ள சிலைமான் ரயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தப்படுமா?.. பயணியர் எதிர்பார்ப்பு

மதுரை: திருப்புவனம் அருகே கீழடி அருங்காட்சியகம் பகுதியில் அமைந்துள்ள சிலைமான் ரயில் நிலைய நடைமேடையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடந்த அகழாய்வு பழந்தமிழர்களின் நாகரீக வாழ்விற்கான அடையாளங்களை வெளிக்கொண்ர்ந்துள்ளது. இங்கு கிடைத்த தொன்மை வாய்ந்த பொருட்களைக் கொண்டு தற்போது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊருக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை அதிகரித்திருக்கிறது. மதுரை பெரியார், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து கீழடி செல்வதென்றால் குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகும்.

மதுரையில் இருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது சிலைமான். மதுரை – ராமேஸ்வரம் ரயில் தடத்தில் இரண்டாவது நிறுத்தமாக இது அமைந்துள்ளது. ரயிலில் 15 நிமிடங்களில் சிலைமான் சென்று விடலாம். அங்கிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள கீழடி செல்வதற்கு, ரயில் நிலையத்திற்கு வெளியே வந்து நின்றால் ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. இதனால் எளிதாக கீழடி செல்ல முடியும். இதுகுறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘சிலைமான் ரயில் நிலைய நடைமேடை உயரம் குறைவானதாக இருக்கிறது. எனவே, ரயிலில் இருந்து இறங்குவது பயணிகளுக்கு சிரமம் தருவதாக உள்ளது. இதன்படி நடைமேடை சுமார் 3 அடி வரை தாழ்வாக உள்ளதால் அனைவரும் அவதிப்படுகின்றனர்.

எனவே, ரயில்வே நிர்வாகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த நடைமேடையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மைசூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மதுரை வழியாக இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு சிலைமான் ரயில் நிலையத்தில் ஒரு நிமிட நிறுத்தம் கொடுக்கப்படுவதன் மூலம் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் பகுதி மக்களும் கீழடி வந்து அருங்காட்சியகத்தை பார்த்து செல்ல மிகவும் வசதியாக இருக்கும்’’ என்றார்.

The post கீழடி அருங்காட்சியகம் அருகே உள்ள சிலைமான் ரயில் நிலையத்தின் நடைமேடை உயர்த்தப்படுமா?.. பயணியர் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sillaman railway station ,Geezadi Museum ,Madurai ,Tirupuvanam ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...