×

அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களில் போதிய அளவு மண் அள்ள அனுமதிக்க வேண்டும்: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை: கண்மாய்களில் போதிய அளவு மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த மண்பாண்டங்கள் தயார் செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருப்புக்கோட்டை மணிநகரம் குலாளர் தெருவில் மண்பாண்டம் தயார் செய்யும் தொழிலில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சீசனுக்கு ஏற்ப திருவிழா காலங்களில் அக்னிச்சட்டிகள், கால், கை, பாதம், ஆயிரங்கண் பானைகள், நேர்த்திக்கடன் பொம்மைகள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். மேலும் சமையலுக்கு உகந்த பானைகள், தண்ணீர் குவளைகள், வாணலி தட்டுகள் என வீட்டு உபயோகத்திற்கு தேவையான மண்பாண்டங்களையும் இவர்கள் தயார் செய்கின்றனர். இங்கு தயார் செய்யப்படும் அக்னி சட்டிகளை விருதுநகர், கமுதி, கல்லூரணி, தாயமங்கலம், இருக்கன்குடி ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களுக்கு இங்கேயிருந்து வாங்கி செல்கின்றனர்.

சீசன் நேரங்களில் ஒரு மாதத்திற்கு குடும்பத்தோடு மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபடுகின்றனர். தற்போது புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் சித்திரை பொங்கலுக்காக அக்னிசட்டிகள், பொம்மைகள் தயார் செய்து வருகிறார்கள். இவர்கள் தரமான களிமண்ணை தேர்வு செய்து, மண்பாண்டங்களை தயார் செய்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் மணிநகரம் பகுதியில் ஏராளமானோர் மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது மண்பாண்டங்களை தயார் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அன்றாட உபயோகங்களில் மண்பாண்டங்களை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. இதனால் மண்பாண்டங்களின் தேவையும் குறைந்து விட்டது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மண்பாண்ட தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மணிநகரம் குலாளர் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் கூறுகையில், ‘‘மணல் சரியாக கிடைக்கவில்லை. கண்மாயில் இருந்து மணல் எடுத்து வர பணம் அதிகம் செலவாகிறது. மணல் அள்ள கெடுபிடி செய்கின்றனர். மழை காலங்களில் இந்த தொழிலை செய்ய முடியாது. 6 மாதம்தான் இந்த தொழில் நன்றாக நடக்கும். எனவே மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் அளவிற்கு உதவி செய்தால் நன்றாக இருக்கும். இந்த தொழில் அழியாமல் இருக்க அரசு உதவ வேண்டும். மண்பாண்ட பொருட்களுக்கு தேவையான மண்ணை நீர் நிலைகளிலிருந்தே எடுக்கிறோம். புலியூரான், பன்னிக்குண்டு போன்ற பகுதிகளில் மண் எடுக்கிறோம்.

மண் அள்ளுவதற்கு அதிகாரிகள் மிகவும் கெடுபிடி காட்டுகிறார்கள். குளங்களில் இருந்து மண்ணை ஈரப்பதத்துடன் ஒவ்வொரு சாக்கிலும் அள்ளிக்கொண்டு தான் வரமுடிகிறது. மொத்தமாக அள்ளி வர முடியவில்லை. இதனால் போதிய மண் கிடைக்கவில்லை. மண்பாண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் தாராளமாக மண் அள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்தும் எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. நான் 50 வருடங்களுக்கு மேலாக இந்த தொழிலை செய்து வருகிறேன். போதிய லாபம் கிடைக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

The post அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களில் போதிய அளவு மண் அள்ள அனுமதிக்க வேண்டும்: மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanmais ,Aruppukkottai ,
× RELATED இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு