×

கோடை வெயிலால் மேய்ச்சல் பகுதி வறண்டது: கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பு அதிகம் பாதிக்கப்பட்டதுடன் பால் உற்பத்தியும் கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கடுமையான வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மக்களும் வெயில் சூட்டை தணிக்க உடலுக்கு இதமான குளிர்ச்சியான உணவுகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக தேனி மாவட்டத்தில் வெயில் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் வெயிலால் மதியம் நேரத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே தஞ்சம் அடைந்து வருகின்றனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் ஆண்டிபட்டி ஒன்றியம், கடமலை-மயிலை ஒன்றியம் என இரண்டு ஒன்றியத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களும் 200க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளனர். இதில் கடமலை-மயிலை‌ ஒன்றியத்தில் 70‌ சதவீதத்திற்கும்‌ மேற்பட்ட கிராமங்கள் மலை சார்ந்த பகுதிகளாகவே உள்ளது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்களுக்கு எந்த ஆற்றுப் பாசனமும் கிடையாது. மழையை எதிர்பார்த்து தான் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டிபட்டி பகுதிகளிலும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாததால் நீர்வரத்து ஓடைகள், கண்மாய்கள், குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது.

செடி, கொடிகளும் காய்ந்து காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக கால்நடை வளர்ப்பு தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. தற்போது கோடை வெயில் அதிகரித்துள்ளதால் கால்நடைகளுக்கு தீவனங்கள் இல்லாமல் கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர். பொதுவாக கால்நடை வளர்ப்பவர்கள் அவற்றை அந்தந்த பகுதியில் உள்ள மலையடிவார பகுதிகளிலும், விவசாயம் இல்லாத தரை பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்காக அழைத்து செல்வார்கள். பருவமழை காலம் முடிந்து கால்நடைகளுக்கு இயற்கையான பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும். ஆனால் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால் அனைத்து பகுதிகளும் வறண்டு காணப்படுகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்த போதும், இந்த ஆண்டு தொடக்கம் முதலே மழைகள் எதுவும் பெய்யவில்லை.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தரிசு நிலங்களில் வளர்ந்திருந்த செடிகள் அனைத்தும் காய்ந்து விட்டது. இதனால் கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள் தற்போது கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை அழைத்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் வரை மேய்ச்சலுக்கு சென்று வந்தும் பசுந்தீவனங்கள் கிடைக்கவில்லை என புலம்பி வருகின்றனர். மலைப்பகுதி மற்றும் விவசாயம் அல்லாத தரிசு இடங்களில் தீவனங்கள் கிடைக்காததால் கால்நடை வளர்ப்போர் பெறும் அவதியடைந்து வருகின்றனர். நகர் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் சாக்கடை ஓரத்தில் இருக்கும் புல்களை மேய்ப்பதற்காக விடுகின்றனர். மாடுகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காமல் கடைகளில் வாங்கி தீவனங்களை வழங்குகின்றனர். மழைக்காலங்களில் மாடுகளுக்கு தேவையான இயற்கை தீவனங்களும், அதிக தண்ணீரும் கிடைக்கும். ஆனால் வெயில் காலத்தில் முறையான இயற்கை தீவனம் கிடைக்கவில்லை. போதுமான தண்ணீரும் சரிவர கிடைப்பதில்லை.

இதனால் மாடுகளுக்கு பால் உற்பத்தி குறைந்து வருவதாக கால்நடை வளர்ப்போர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். ஆடுகளுக்கு போதிய தீவனங்கள் கிடைக்காததால் ஆடுகளை பலரும் விற்பனை செய்து வருகின்றனர். தீவனங்கள் இல்லாததால் ஆடுகள் மெலிந்து எடை குறைந்தும் காணப்படுகிறது. இதனால் சீசன் நேரத்தில் நல்ல விலைக்கு விற்கும் ஆடுகளை தீவனங்கள் இல்லாமல் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் பசுந்தீவனங்கள் கிடைக்காமல் உள்ளது. கால்நடைகளுக்கு கடைகளில் இருந்து தீவனங்கள் வாங்கி கொடுக்கும் நிலைக்கு தற்போது ஆளாகியுள்ளோம். ஆண்டிபட்டி சுற்றியுள்ள ஓடைகளிலும், கண்மாய்களிலும் தண்ணீர் இல்லாததால் நீர்நிலைப் பகுதிகளிலும் தீவனங்கள் கிடைக்கவில்லை கோடை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளதால் கால்நடை வளர்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

The post கோடை வெயிலால் மேய்ச்சல் பகுதி வறண்டது: கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை appeared first on Dinakaran.

Tags : Antipati ,Dinakaran ,
× RELATED கோபத்தைக் குறைக்க உதவும் உலர் திராட்சை!