×

குப்பைகளை சேகரித்து அகற்ற பேட்டரி வாகனம் வழங்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருவாடானை, ஏப்.7:திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் வந்து தங்கி சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. எப்போதும் வெளியூர் பக்தர்கள் வந்து செல்வதால் நகர் பகுதி போன்றே இருக்கும். கோயிலில் அன்னதானம் நடைபெறுவதால் பக்தர்கள் சாப்பிடும் இலைகள் மற்றும் கடைகளில் தூக்கி எறியப்படும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் என அதிகளவில் குப்பை சேரும்.

இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தால் துப்புரவு தொழிலாளர்கள் தள்ளுவண்டியில் குப்பைகளை அள்ளி இழுத்துச் செல்கின்றனர். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் குப்பைகளை கொட்ட வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள துப்புரவு தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்களாகவும், வயதானவர்களாக இருப்பதால் குப்பை வண்டியை இழுக்க ஆளில்லாத நிலையில் கோயிலுக்கு அருகிலேயே சில நேரம் கொட்டி விடுகின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. திருவெற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், அதிகளவு மக்கள் வந்து செல்லும் இந்த ஊருக்கு ஊராட்சி சார்பில் பேட்டரியால் இயங்கும் இரண்டு குப்பை வண்டிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது குப்பை வண்டிகளை இழுக்க போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் இங்கு சேரும் குப்பைகளை அங்கேயே கொட்டி தீவைத்து கொளுத்துகின்றனர். இதில் ஏற்படும் புகையால் குடியிருப்புவாசிகள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு நிதி ஒதுக்கி பேட்டரியால் இயங்கும் குப்பை வண்டியை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய ஊராட்சி என்பதால் டிராக்டர் மற்றும் பவர் டில்லர் போன்றவைகள் வாங்க அரசு விதிகள் இடம் கொடுக்கா விட்டாலும் இப்போது புதிதாக வந்துள்ள பேட்டரி குப்பை வண்டிகளை வழங்க வேண்டும் என்றனர்.

The post குப்பைகளை சேகரித்து அகற்ற பேட்டரி வாகனம் வழங்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvadanai ,Bhagampriyal ,Sametha Vanmeeka Nadhar Swamy ,Thiruvettiyur ,
× RELATED திருவாடானை பஸ் ஸ்டாண்டில் பேஸ்...