×

ஷர்துல் அதிவேக அரை சதம்: கொல்கத்தா அபார வெற்றி

கொல்கத்தா: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. ரஹ்மானுல்லா, வெங்கடேஷ் இருவரும் கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். வெங்கடேஷ் 3 ரன் எடுத்து டேவிட் வில்லி வேகத்தில் கிளீன் போல்டாகி வெளியேற, அடுத்து வந்த மன்தீப் சிங் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.

கேப்டன் நிதிஷ் ராணா 5 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா 47 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ரஹ்மானுல்லா – ரிங்கு சிங் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தனர். ரஹ்மானுல்லா 57 ரன் (44 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, கேகேஆர் 11.3 ஓவரில் 89 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரிங்கு சிங்குடன் இணைந்த ஷர்துல் தாகூர் யாரும் எதிர்பாராத வகையில் ருத்ரதாண்டவமாடினார்.

பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு ஆர்சிபி பந்துவீச்சை பதம் பார்த்த அவர் 20 பந்தில் அரை சதம் அடித்து, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் ஐதராபாத் அணிக்கு எதிராக 20 பந்தில் அரை சதம் அடித்த சாதனையை ஷர்துல் சமன் செய்தார். ரிங்கு – ஷர்துல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 103 ரன் சேர்த்து அசத்தியது. ரிங்கு 46 ரன் (33 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ஷர்துல் 68 ரன் விளாசி பெவிலியன் திரும்பினர். கொல்கத்தா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது. ஆர்சிபி பந்துவீச்சில் டேவிட் வில்லி, கர்ண் ஷர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய ஆர்சிபி 17.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து 81 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அணியில் அதிகபட்சமாக டுப்ளசிஸ் அதிகபட்சமாக 23 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இறுதியில் டேவிட் வில்லி 20 எடுத்து கடைசி வரை அவுட் ஆகவில்லை. ஆகாஷ் தீப், 17( 8 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர் அடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 3.4 ஓவர் வீசி 3 விக்கெட், சுயாஷ்சர்மா 4 ஓவர் வீசி 3 விக்கெட் கைப்பற்றினர். இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post ஷர்துல் அதிவேக அரை சதம்: கொல்கத்தா அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Shirtul ,Kolkata ,Kolkata Knight Riders ,IPL League ,Royal Challenger Bangalore ,Shartul ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் நீட் தகுதி பட்டியலில்...