×

திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகுலு பத்மஜா என்ற பெண்ணுக்கும், திருவள்ளூர், ஆசூரி தெருவைச் சேர்ந்த சுதர்சனம் என்பருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்த தம்பதியருக்கு அசுத் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் குழந்தையுடன் 43 நாட்கள் மட்டுமே இருக்க நாகுலு பத்மஜாவை சுதர்சனம் குடும்பத்தார் அனுமதித்துள்ளனர். அதன் பின்னர் குழந்தைக்கு பால் கொடுக்கவோ, பராமரிக்கவோ அனுமதிக்காமல், குழந்தையை வாங்கிக் கொண்டு நாகுலு பத்மஜாவை ஆந்திர மாநிலத்திற்குத் துரத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தனது குழந்தையை பார்க்கவும், பராமரிக்கவும் அனுமதிக்கும்படி பலமுறை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நாகுலு பத்மஜா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அனுமதிக்காததால், குழந்தையை உடனடியாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.யிடம் நாகுலு பத்மஜா புகார் மனு கொடுத்தார். இதனைத் தொடர்ந்து எஸ்பி பா.சிபாஸ் கல்யாண், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் மனுவை அனுப்பி வைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

இந்நிலையில் போலீசார், குழந்தையை தன்னிடம் கொடுக்காமல், கணவர் சுதர்சனத்திற்கு சாதகமாக செயல்படுவதாகவும், உடனடியாக குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய நுழைவாயிலில் அமர்ந்து நாகுலு பத்மஜா நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி, தம்பதியரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவரது வீட்டாரும் நேரில் ஆஜராகி, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நாகுலு பத்மஜா அங்கிருந்து சென்றார்.

The post திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur All ,Women ,Guild Station ,Dharna ,Thiruvallur ,Thiruvallur All Women's Guild Station ,Nakulu ,AP ,All Women's Call Station ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது