×

ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிக்க வைப்பதாக கூறி ரூ10 லட்சம் மோசடி செய்த 2 கல்வி ஆலோசகர்கள் கைது: நுங்கம்பாக்கம் போலீசார் அதிரடி

சென்னை: ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறி, மாணவனிடம் ரூ10 லட்சம் பணம் பெற்று மோசடி ெசய்ததாக தனியார் கல்வி ஆலோசனை நிறுவன நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் நசரத் பேகம் (36). இவர், தன் மகன் அஸ்ரப்பை ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க வைக்க விரும்பினார். அதற்காக, நசரத் பேகம் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள நிசான் கல்வி ஆலோசகர்கள் மூலம் ரஷ்யாவில் உள்ள ஆர்மீனியா பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படிக்க கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யாவுக்கு மகனை அனுப்பியுள்ளார். அதன்படி ரஷ்யா சென்றான் மாணவன் அஸ்ரப்.

அப்போது, கல்லூரி நிர்வாகம் கல்விக்கான பணத்தை கட்ட கோரி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் தனியார் கல்வி நிறுவனம் ரூ10 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு கல்வி நிறுவனத்திற்கு பணம் கட்டவில்லை என்றும், அஸ்ரப்பை கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாணவன் அஸ்ரப் வேறு வழியின்றி ரஷ்யாவில் இருந்து 3 மாதத்தில் சென்னை திரும்பினார். பிறகு ரஷ்யா அனுப்பிய கல்வி நிறுவன ஆலோசனை மையத்திற்கு சென்று சம்பவம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் முறையாக பதில் அளிக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் அஸ்ரப் மற்றும் அவரது தாய் நசரத் பேகம் ஆகியோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்படி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது, ரூ10 லட்சம் பணம் பெற்று அதை ரஷ்யாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் கட்டாமல் ஏமாற்றியது தெரியவந்தது. இதைதொடர்ந்து தனியார் கல்வி ஆலோசனை மைய நிர்வாகிகளான புதுச்சேரியை சேர்நத் ஏஞ்சலா பெனடிக் (36), சென்னை செனாய் நகரை சேர்ந்த பிரேம்நாத் (32) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் எழும்பூர் 13வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் பணத்திற்கான முழு உத்தரவாதம் அளித்ததை தொடந்து மாஜிஸ்திரேட் சக்திவேல் இருவரையும் ஜாமீனில் விடுவித்தார்.

The post ரஷ்யாவில் எம்.பி.பி.எஸ் படிக்க வைப்பதாக கூறி ரூ10 லட்சம் மோசடி செய்த 2 கல்வி ஆலோசகர்கள் கைது: நுங்கம்பாக்கம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : MBBS ,Russia ,Nungambakkam ,Chennai ,
× RELATED மாவட்டத்தில் நீட் தேர்வை 5,006 மாணவர்கள் எழுதினர்