×

புனித வியாழனையொட்டிதேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு

நெல்லை, ஏப்.7: புனித வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு நேற்று நடந்தது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவக்காலங்களில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து, தங்கள் ஆன்ம பலனை அதிகரித்து கொள்வது வழக்கம். இவ்வாண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி 22ம் தேதி சாம்பல் புதனோடு துவங்கியது. தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தவக்கால நடைபயணம், தவக்கால சிறப்பு தியானம், திருப்பயணம், சிலுவை பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டனர்.

கடந்த 2ம் தேதியன்று தவக்காலத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி நிகழ்ச்சிகள் நடந்தன. இதையடுத்து நேற்று தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான புனித வியாழனையொட்டி தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு சிலுவையில் அடிக்கப்படும் நாளுக்கு முந்தைய தினம் இரவில் தனது 12 சீடர்களுக்கும் திருவிருந்து அளித்தார். நற்கருணை எனப்படும் புதிய உடன்படிக்கையை இயேசு தெரிவித்ததோடு, அந்நாளில் தனது சீடர்களின் பாதங்களை கழுவினார். இதை நினைவுகூரும் வகையில் நேற்று புனித வியாழனை முன்னிட்டு பாளை தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

பாளை சவேரியார் பேராலயத்தில் ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் 12 அருள்பணியாளர்களுக்கு பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயரின் செயலர் மைக்கேல் பிரகாசம், பேராலய பங்குத்தந்தை சந்தியாகு, உதவி பங்குத்தந்தையர்கள் இனிகோ இறையரசு,செல்வின் ஆகியோர் பங்கேற்றனர். பாளை புனித அந்தோனியார் ஆலயம், சேவியர் காலனி பேதுரு ஆலயம், மேலப்பாளையம் தூய அந்திரேயா தேவாலயம், சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயம், நெல்லை டவுன் அடைக்கல அன்னை ஆலயம், மகராஜநகர் தூய யூதா ததேயூ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.

இதே போல் நெல்லை சந்திப்பு உடையார்பட்டி திரு இருதய ஆலயத்தில் புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு பங்குத்தந்தை மைக்கேல் ராசு மற்றும் எம் எஸ் அந்தோனிசாமி அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர். இதைத்தொடர்ந்து இதில் பங்கேற்ற பங்கு மக்களில் முதியவர்கள் 12 முதியோர்களின் பாதங்களை கழுவி குருவானவர் முத்தமிட்டு ஆசீர் வழங்கினர். பின்னர் நடந்த நற்கருணை பவனியில் திரளானோர் பங்கேற்றனர்.

இதனிடையே பாளை புனித அந்தோனியார் ஆலயத்தில் தவக்கால பெரிய வியாழனை முன்னிட்டு நேற்று சிறப்பு அசனம் நடந்தது. தவக்காலத்தை முன்னிட்டு பாளை சீவலப்பேரி சாலை புனித அந்தோனியார் ஆலயத்தில் தினமும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் புனித வியாழனை முன்னிட்டு சிறப்பு அசனம் நடந்தது. இதை மரம், ஓடு வியாபாரிகள் சங்கத்தலைவர் மரியஜான் துவக்கிவைத்தார். இதில் செயலாளர் டைட்டஸ் பாபு, பொருளாளர் பாஸ்கர், அதிமுக ஜெ., பேரவை செயலாளர் ஜெரால்டு, சமக முன்னாள் மாவட்டச் செயலாளர் சேவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து தவக்கால சிறப்பு திருப்பலி நிகழ்வுகள் இரவில் நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

பேட்டை: இதே போல் பெரிய வியாழனை முன்னிட்டு பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையொட்டி சிறப்பு தியானங்கள், திருப்பயணங்கள் மேற்கொள்வதோடு ஆடம்பர செலவுகளைத் தவிர்த்து சேமிக்கப்படும் தொகையை ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர். தவக்காலத்தின் சிகரமான பெரிய வியாழனை முன்னிட்டு பேட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பேட்டை பங்குத்தந்தை மரிய அந்தோனிராஜ் தலைமையில் காலை ஜெபம், மன்றாட்டு ஜெபம் நடந்தது.

மேலும் உணவுப்பொருள் அர்ச்சிப்பைத் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். இதில் சர்வ சமயத்தினரும் பங்கேற்று நோன்பு கஞ்சி பெற்றுச் சென்றனர். மாலை 6 மணிக்கு திருப்பலி, பாதங்கழுவும் நிகழ்ச்சிகள் நடந்தன. புனித வெள்ளியான இன்று (7ம் தேதி) கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் வகையில் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடக்கிறது. தவக்காலத்தின் நிறைவாக உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் விழாவை முன்னிட்டு நாளை (8ம் தேதி) சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பேட்டை பங்குத்தந்தை மரிய அந்தோனிராஜ் தலைமையில் இறை மக்கள் செய்துள்ளனர்.

The post புனித வியாழனையொட்டி
தேவாலயங்களில் பாதம் கழுவும் சடங்கு
appeared first on Dinakaran.

Tags : Holy Jupiter ,Christians ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...