×

மதுராந்தகம் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்காமல் ஆங்காங்கே பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக விளங்கி வரும் என்.எச்.45 சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் வழியாக செல்கிறது. இந்த நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாகவும், திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாகவும் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையின் மதுராந்தகம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே பேரிக்காடுகள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கருங்குழி, மதுராந்தகம் அய்யனார் கோயில், ஊனமலை போன்ற பகுதிகளின் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகளை குறைக்கும் நோக்கத்திற்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், எச்சரிக்கை பலகை வைத்து நெடுஞ்சாலையில் பேர்ரிகாடுகள் வைக்கப்பட்டுள்ளன என்பதை வாகன ஓட்டிகள் முன்னதாகவே அறிந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத காரணத்தினால் வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிக்கும் இந்த நெடுஞ்சாலையில் சாலையின் பெரும்பகுதியை மறைத்தபடி அமைக்கப்பட்டு இருக்கும். இந்த பேரிகார்டுகள் திடீரென கவனிக்கும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பிரேக் போடும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதனால், வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கும் வாகனத்தை ஓட்டுபவருக்கும் அசௌகரியமான நிலை உண்டாகிறது. இது மட்டுமின்றி பின்னால் வரும் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சூழலும் உள்ளது. இதையெல்லாம் தவிர்க்கும் நோக்கில் சாலையின் இரண்டு மார்க்கங்களிலும் பேரிகாடுகள் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே அனைத்து வாகன ஓட்டிகளும் அறிந்து கொள்ளும் வகையில், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

மேலும், சாலையின் இடது புறத்தில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட சாலைப் பகுதியையும் சேர்த்து, பல இடங்களில் இந்த பேரிகாடுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையின் ஓரம் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் மையப்பகுதிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. இவற்றையெல்லாம் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கவனத்தில் மேற்கொண்டு விபத்துகளை தவிர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேரிக்காடுகளை முழுமையான வழிகாட்டுதல்களோடு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

  • எச்சரிக்கை பலகை தேவை
    வாகன ஓட்டிள் கூறுகையில், ‘இச்சாலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் நிலை உள்ளது. இதுபோன்று பேரிகார்டுகள் வைத்தால் வாகன விபத்துகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், விபத்துக்கள் ஏற்படவே அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே, சாலை ஓரங்களில் பள்ளி, மருத்துவமனை அருகில் உள்ளது என எச்சரிக்கை பலகை வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருக்கும். மேலும், இரவு நேரத்தில் பேரிகார்டுகளை அகற்றி விட்டால் மேலும் வாகன ஓட்டிகளுக்கு நல்லது’ என்றார்.
  • விபத்துக்கள் குறையும்
    போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘ தேசிய நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால், விபத்துகள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இது போன்று பேரிகார்டுகள் வைத்து வாகனங்களின் வேகத்தை குறைப்பதால் விபத்து குறைய வாய்ப்புள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் ஓரங்களில் உள்ள கிராம மக்கள் சாலையை கடக்கவும், ஆடு, மாடுகள் சாலையை கடந்து செல்ல பேரிகார்டுகள் அமைத்துள்ளதால் உதவிகரமாக இருக்கும். கால்நடைகளின் உயிர் பலியும் தவிர்க்கப்படும்’ என்றார்.

The post மதுராந்தகம் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurandakam ,Madhya Area ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...