×

மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் ரூ2.5 கோடியில் ஸ்பாஞ்ச் பூங்கா: கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் வரவேற்பு

திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் ரூ2.5 கோடியில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க திட்டமிட்டு, இதற்காக ரூ50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சோழிங்கநல்லூர், அம்பத்தூர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் போதிய நகர கட்டமைப்பு இல்லாத நிலை உள்ளது. இந்தப் பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் போதியளவில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பவில்லை. அதேநேரம், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி காலி இடங்கள் அதிகளவில் உள்ளன.

அவற்றை அடையாளம் கண்டு அவற்றில் புது முயற்சியாக மழைநீர் சேகரிப்புடன் கூடிய ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்களை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, 126 திறந்தவெளி இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில், சுற்றுசுவர் அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்படும். மேலும், மழைநீர் வடிகால் இணைப்புடன் கூடிய குட்டை அமைக்கப்படும். இந்தக் குட்டையின் அடிப்பகுதி, நீரை பூமிக்குள் உறிஞ்சும் தன்மையில் அமைக்கப்படும். மழை காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கும் பட்சத்தில், மழைநீர் வடிகால் வாயிலாக, குட்டைக்குள் நீர் கொண்டு வரப்படும். குட்டை நிரம்பும் பட்சத்தில், அவை வெளியேற்றும் கால்வாய் வாயிலாக, அருகாமையில் உள்ள குட்டை அல்லது குளம் ஆகிய பகுதிகளுக்கு நீர் கொண்டு செல்லப்படும். இதன்வாயிலாக, குடியிருப்பு பகுதிகளில் நீர் தேக்கத்தை தடுக்க முடியும்.

இந்த 126 பூங்காக்களில் முதற்கட்டமாக 50 பூங்காக்களில், குட்டையுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சி மக்களிடையே வரவேற்பை பெறுவதை அடுத்து, மற்ற இட வசதி உள்ள பூங்காக்களில் விரிவுப்படுத்தப்படும், என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மணலி மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மாத்தூர் எம்.எம்.டி.ஏ 2வது பிரதான சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் மணலி மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் மண்டலக்குழு தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். திட்ட அதிகாரிகள் ஸ்பாஞ்ச் பூங்கா அமைப்பதன் மூலம் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து டிஜிட்டல் திரை மூலம் விளக்கினர். இதையடுத்து ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி வார்டு கவுன்சிலர் காசிநாதன் மற்றும் பொதுமக்கள் ஆதரவளித்து வரவேற்றனர். கூட்டத்தில் மாநகராட்சி மண்டல கண்காணிப்பு அதிகாரி சிவகுரு பிரபாகரன், செயற் பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், மாநகராட்சி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்பாஞ்ச் என்றால் என்ன?
பஞ்சு போன்று எவ்வளவு தண்ணீரையும் உறிஞ்சும் அமைப்புக்கு ஸ்பாஞ்ச் என்று பெயர். இதில் எந்தவித சிமென்ட் கட்டுமானங்களும் இருக்காது. பூங்கா முழுவதும் மரங்கள் இருக்கும், எல்லா பூங்காவிலும் மழைநீர் சேகரிப்பு வசதி இருக்கும் மேலும் தண்ணீரை உறிஞ்சும் வகையில் செயற்கை குட்டைகள் இருக்கும். இங்கு, மழைநீர் தேங்காத வண்ணம் உறிஞ்சி நிலத்திற்குள் அல்லது அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

The post மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் ரூ2.5 கோடியில் ஸ்பாஞ்ச் பூங்கா: கருத்துக்கேட்பு கூட்டத்தில் மக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Sponge Park ,Mathur MMDA ,Tiruvottiyur ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...