×

10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா தொற்று குறித்து 8 மார்க் கேள்வி: கண் முன் நடந்ததை விரிவாக எழுதிய மாணவர்கள்

சேலம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று தொடங்கிய 10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றி 8 மார்க் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு கண்முன் நடந்ததை மாணவர்கள் விரிவாக எழுதினர். தமிழ்நாடு முழுவதும் நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், 15 ஒரு மார்க் கேள்விகளும், 2 மார்க் கேள்விகள் 9ம், 3 மார்க் கேள்விகள் 6ம், 5 மார்க் கேள்விகள் 5ம், 8 மார்க் கேள்விகள் 3ம் கேட்கப்பட்டிருந்தது. இவற்றில் ஒரு மார்க், 2 மார்க், 3 மார்க், 5 மார்க் கேள்விகள் மிக எளிதாக இருந்தது.

8 மார்க் கேள்விகள் 3 எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்வியிலும், இது அல்லது அது என இரு கேள்விகளை கேட்டிருந்தனர். அதனால், மாணவர்கள் அந்த 8 மார்க் கேள்விகளையும் சரியாக தேர்வு செய்து எழுதினர். இவற்றில் கடைசி கேள்வியாக, அதாவது 45வது கேள்வியில் அ மற்றும் ஆ ஆகிய இரண்டும் மிக எளிதான நிகழ்வை மையமாக கொண்டு கேட்கப்பட்டிருந்தது. 45 அ கேள்வியாக உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக. குறிப்பாக முன்னுரை, அரசு பொருட்காட்சி அமைவிடம், பலவித அரங்குகள், நடைபெற்ற நிகழ்ச்சிகள், அடைந்த உணர்வுகளும்-நன்மைகளும், முடிவுரை ஆகியவற்றை எழுதிட குறிப்பிட்டிருந்தனர்.

45 ஆ கேள்வியாக குறிப்புகளை கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக. குறிப்பாக முன்னுரை, கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள், நமது கடமைகள், முடிவுரை ஆகியவற்றை எழுதிட கேட்கப்பட்டிருந்தது. இதில், பெரும்பாலான மாணவ, மாணவிகள் கொரோனா பெருந்தொற்று, தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயல்பாடுகள் பற்றி விரிவாக, கண்முன் பார்த்ததையும், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எழுதியதாக தெரிவித்தனர்.

The post 10ம் வகுப்பு தமிழ் தேர்வில் கொரோனா தொற்று குறித்து 8 மார்க் கேள்வி: கண் முன் நடந்ததை விரிவாக எழுதிய மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Tamil Nadu ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...