×

வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பீகார் யூடியூபர் அதிரடி கைது: மதுரை மத்திய சிறையில் அடைப்பு

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீகார் யூடியூபர் மனீஷ் காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மனீஷ் காஷ்யப் (எ) டி.கே.திவாரி (32). சச்தக் நியூஸ் என்ற யூடியூப் சேனல் நிர்வாகி. இந்த சேனலில் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக, போலி வீடியோக்களை பதிவிட்டதால் இவர் மீது புகார்கள் குவிந்தன. இதுதொடர்பான மற்றொரு வழக்கில், பீகார் மாநிலம், ஜக்தீஷ்பூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரை சைபர் க்ரைம் போலீசார், பீகார் சென்று மனீஷ் காஷ்யப்பை மதுரை கொண்டு வந்து ஜே.எம் 1 நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 30ல் ஆஜர்படுத்தினர். பின் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஏப். 3ல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஏப். 5 வரை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

போலீசாரின் விசாரணைக்கு காஷ்யப் ஒத்துழைக்கவில்லை. பணத்திற்காக பொய்யான தகவலை பரப்பியுள்ளார் உள்ளிட்ட தகவல்களின் பேரில், தொடர் விசாரணைக்காக மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைபர் க்ரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு செய்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மனீஷ் காஷ்யப்பை வரும் 19ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்டதன் எதிரொலியாக, மதுரை சைபர் கிரைம் போலீசார், எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் மனீஷ் காஷ்யப் மீது நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் பீகார் யூடியூபர் அதிரடி கைது: மதுரை மத்திய சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Madurai Central Jail ,Madurai ,Manish Kashyap ,
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து